Skip to content

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா தவெக?; எடப்பாடி பழனிசாமி தெரிவித்த ‘ஷார்ப்’ பதில்!

சென்னை,மார்ச்.15; வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்தே போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக-பாஜக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையவிருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் (மார்ச் 13, வெள்ளி) காணொளி வாயிலாக நடைபெற்ற தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பெரும்பாலான நிர்வாகிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக தகவல் வெளியானது.

கடைசி நேரத்தில் திமுகவின் நெருக்கடியை எப்படி எதிர்கொள்வது?

தனித்துப் போட்டியிட்டால் கடைசி நேரத்தில் ஆளும் திமுகவின் நெருக்கடியை சமாளிக்க முடியாது என்று தவெக நிர்வாகிகள் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் தனித்து களம் காணும் முடிவை கைவிட்டு பாஜகவுடன் தவெக கைகோர்க்கப் போகிறதா என்று அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் பரவி வருகின்றன.

பாஜகவை கொள்கை எதிரி என்றோம்; பின் எப்படி கூட்டணி?

ஆனால், பாஜகவை கொள்கை எதிரி எனக் கூறிவிட்டு தற்போது அக்கட்சியுடன் எப்படி கூட்டணி அமைக்க முடியும் என்று கட்சிக்குள்ளேயே முனுமுனுப்பு எழுந்ததாகவும் தெரிகிறது.
அதேவேளையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்றுள்ள விஜய், அங்கு பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்துப் பேசவிருப்பதாக செய்திகள் உலாவுகின்றன. ஆனால், இந்தச் செய்திகள் எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

தே.ஜ.கூ-க்கு தவெக வருவதை அதிமுக விரும்பவில்லை

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளர் விஜய் தான் என்று ஆரம்பத்திலேயே அறிவித்த நிலையில், அக்கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதை அதிமுக விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு, முதலமைச்சர் பதவி எனப் பல விசயங்களில் சிக்கல் ஏற்படும் என்பதால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் தவெக வருவதை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும் தெரிகிறது.

தவெகவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை: இபிஎஸ்

இதுபோன்ற சூழலில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழக வெற்றிக் கழகம் வருமா என்ற கேள்விக்கு, அந்தக் கட்சியுடன் அதிமுக இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று இபிஎஸ் பதிலளித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *