டெல்லி,மார்ச்.15; புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
புதுச்சேரியை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 15ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வந்தது.
வேட்புமனு தாக்கல் நாளை தொடக்கம்; ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல்!
இதன் தொடர்ச்சியாக டெல்லியில் இன்று (மார்ச் 15, ஞாயிறு) செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 9ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார்.
வாக்குப்பதிவிற்கு இன்னும் 24 நாட்களே உள்ள நிலையில், நாளை முதலே வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போதிய இடைவெளியின்றி தேதி அறிவிப்பு: ஜோதிமணி எம்பி
மார்ச் 23ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
போதி்ய இடைவெளி கொடுக்காமல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
பாஜகவின் கைப்பாவையாக செயல்படும் தேர்தல் ஆணையம்
இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
பொதுவாக தமிழ்நாடு, கேரளம் மற்றும் புதுச்சேரியில் ஒரே நாளில் தான் தேர்தல் நடத்தப்படுவது வழக்கம் – இம்முறை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது- இதற்கான காரணத்தை அறிந்து கொள்வது ஒன்றும் கஷ்டமில்லை என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
பாஜகவின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்பது தேர்தல் தேதியிலிருந்தே தெளிவாகத் தெரிகிறது என்றும் அவர் சாடியிருக்கிறார்.
எல்லாவற்றையும் அறியும் அரசியல் புரிதல் தமிழ்நாட்டவருக்கு உண்டு
எல்லாவற்றையும் எதிர்கொள்கிற அறிவும் அரசியல் புரிதலும் தமிழ்நாட்டு மக்களுக்கு உண்டு-இந்தியா கூட்டணிக்கும் உண்டு எனவும் ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.
கடந்த 30 ஆண்டு காலமாக தமிழ்நாட்டிற்கும் புதுச்சேரிக்கும் ஒரே நாளில் தான் தேர்தல் நடைபெற்று வந்தது. இம்முறை அந்த மரபு உடைக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிலங்களுக்கு ஒரேநாளில் தேர்தல் நடத்துவது வழக்கம்
பொதுவாக தேர்தல் ஆணையம் நிர்வாக வசதிக்காகவும், பாதுகாப்புப் படையினரை நகர்த்துவதற்காகவும் அண்டை மாநிலங்களுக்கு ஒரே நாளில் தேர்தல் நடத்துவது வழக்கம்.
ஆனால், 2026 தேர்தலில், கேரளா மற்றும் புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
அங்கு பணியில் ஈடுபடும் மத்தியப் பாதுகாப்புப் படையினரை, ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டிற்கு எளிதாக இடமாற்றம் செய்ய இந்த 14 நாள் இடைவெளி உதவும் எனக் கருதப்படுகிறது. சிறிய மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்ற பார்முலா இம்முறை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
