சென்னை,மார்ச்.17; தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்கு, நடிகர் ரஜினிகாந்த் தனது பாணியில் மிக வலிமையான பதிலடியை கொடுத்துள்ளார்.
சர்ச்சையின் பின்னணி: ஆதவ் அர்ஜுனா கூறியது என்ன?
கடந்த 12-ம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தின் போது பேசிய அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, எம்ஜிஆருக்கு பின் ஒரு பிரபலமான நடிகராக இருந்து அரசியலுக்கு வர நினைத்தவர் ரஜினிகாந்த்; தமிழ்நாடு அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்ற வேண்டும் என்று விரும்பினார்; ஆனால் திமுக குடும்பம் ரஜினிகாந்துக்கு பல மிரட்டல்களை கொடுத்தது;
அவரை அரசியலுக்கு வரவிடாமல் பார்த்துக் கொண்டது. அவர் இன்று என்ன ஆனார், கடைசியில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பிலேயே நடிக்கச் சென்றுவிட்டார். ரஜினிகாந்த் மீது எந்த விமர்சனமும் கிடையாது. ஆனால் மிரட்டலை சமாளிக்கும் மனவலிமை விஜய்யிடம் இருக்கிறது” என்று கூறியிருந்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆதவ் அர்ஜூனாவுக்கு பதிலடி கொடுத்து ரஜினி அறிக்கை
ஆதவ் அர்ஜுனாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இன்று (மார்ச் 17, 2026) நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில், ஆதவ் அர்ஜூனாவின் அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுன மூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத் துறையினர்,என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும். வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்! என்று ரஜினிகாந்த் தனது அறிக்கையில் பதிலடி கொடுத்துள்ளார்.
“காலம் பதில் சொல்லும்” என்ற வாசகம் சமூகவலைதளங்களில் வைரல்
தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி சூடுபிடித்துள்ள நிலையில், ரஜினிகாந்தின் இந்த “காலம் பதில் சொல்லும்” என்ற வாசகம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிரட்டல் புகார்களை மறுத்துள்ள ரஜினிகாந்த், தனது நாகரிகமான அதேசமயம் வலிமையான பதிலடி மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
