தஞ்சாவூர்,மார்ச்.19; பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் புழக்கம், படுகொலைகள் போன்றவற்றை தடுக்கவில்லை எனக்கூறி, திமுக அரசைக் கண்டித்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டார். இதில் பேசிய தினகரன், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை (OPS) மிகக் கடுமையாக விமர்சித்தார்; ஓபிஎஸ் “நரி வேடம் போடுபவர்” என்று விமர்சித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“பிரிந்தவர்கள் ஒன்றிணைந்தால் வெற்றி நிச்சயம்“
ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய டிடிவி தினகரன், கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் சார்பு அமைப்புகள் தனித்தனியாக நின்றதே திமுக ஆட்சியமைக்க எளிதான வழியாக அமைந்தது என்று குறிப்பிட்டார். “அன்று நாங்கள் பிரிந்து கிடந்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது; ஆனால் இன்று மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிள்ளைகள் அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறோம்” என்று அவர் முழக்கமிட்டார்.
“பதவிக்காக கொள்கையை விட்டுக் கொடுத்தவர்”
ஓ. பன்னீர்செல்வத்தின் சமீபத்திய அரசியல் நகர்வுகளைச் சுட்டிக்காட்டிய தினகரன், அவர் சுயநலத்திற்காகச் செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டு, பலமுறை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் பதவிகளை அனுபவித்தவர் ஓபிஎஸ். ஆனால் இன்று அதிமுக-வை விமர்சித்துக் கொண்டு, தன்னை ஒரு சாதாரண தொண்டனாகக் கூட சேர்த்துக் கொள்ளுங்கள் என திமுக-விடம் தஞ்சம் புகுந்துள்ளதாக சாடினார்.
“சீட்டுக்காகவும் நோட்டுக்காகவும் செல்லவில்லை”
அமமுக-வின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய தினகரன், “நாங்கள் சிலரைப்போல் வெறும் சட்டப்பேரவைத் தொகுதி இடங்களுக்காகவோ (Seats) அல்லது பணத்திற்காகவோ (Notes) அதிமுக-வுடன் கூட்டணி வைக்கவில்லை; ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதே எங்களின் ஒரே நோக்கம்” என்று கூறினார். அதிமுக-வுடன் கைகோர்த்திருப்பது அதிகாரத்திற்காக அல்ல, கொள்கைக்காகவே என்று அவர் ஆணித்தரமாகப் பேசினார்.
டிடிவி தினகரனை கடுமையாக விமர்சிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி சேர்வதற்கு பதிலாக தூக்கு மாட்டி தொங்கலாம் என கடந்த செப்டம்பர் மாதம் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்ததை சுட்டிக்காட்டினர்.
எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சனம் செய்த தினகரன், தற்போது அரசியல் சூழ்நிலை காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளதாகக் கூறி தப்பிக்க முயற்சிப்பதாகவும் ஓபிஎஸ்-ன் ஆதரவாளர்கள் சாடினர்.
