Skip to content

கேரளம் சட்டமன்றத் தேர்தல்; ஐக்கிய ஜனநாயக முன்னணியில் தொகுதிப் பங்கீடு நிறைவு – காங்கிரஸ் 95 இடங்களில் போட்டி!

திருவனந்தபுரம்,மார்ச்.19; கேரள சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (UDF) தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் அறிவித்துள்ளார்.

140 தொகுதிகளைக் கொண்ட கேரள சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.தேர்தலில் பதிவாகும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கேரளம் தேர்தல் ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதுபோன்ற சூழலில், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப்பங்கீடு உடன்படிக்கை நேற்று (மார்ச் 18, புதன்) கையெழுத்தானது.

அதன்படி, கூட்டணியில் உள்ள முதன்மைக் கட்சியான காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற முக்கிய கூட்டணிக் கட்சிகளுக்கான இட விவரங்கள் பின்வருமாறு:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML): 27 இடங்கள்

கேரளா காங்கிரஸ் (ஜோசப்): 8 இடங்கள்

புரட்சிகர சோசலிச கட்சி (RSP): 5 இடங்கள்

தொகுதி மாற்றங்களும் புதிய முடிவுகளும்

தொகுதிப் பங்கீட்டின் ஒரு பகுதியாகச் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேரளா காங்கிரஸ் (ஜோசப்) கட்சி தனது வசம் இருந்த இடுக்கி மற்றும் எட்டுமானூர் தொகுதிகளை காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்துள்ளது. இதற்குப் பதிலாக திருக்கரிப்பூர், காஞ்ஞங்காடு தொகுதிகள் கேரளா காங்கிரஸிற்கும் மாற்றப்பட்டுள்ளது.

மேலும், மட்டன்னூர் தொகுதி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பய்யன்னூர் தொகுதியில் ஆர்.எஸ்.பி (RSP) போட்டியிடுகிறது. இந்தப் பய்யன்னூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் வி. குஞ்சிகிருஷ்ணனை ஆதரிக்கவும் யு.டி.எப் முடிவு செய்துள்ளது.

பிற கட்சிகளின் பங்கீடு

கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்): அனூப் ஜேக்கப் பிறவம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

CMP: திருவனந்தபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது (இதற்கு உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் சில எதிர்ப்புகள் எழுந்துள்ளன).

RMPI: வடகரை தொகுதியில் போட்டியிடுகிறது (கே.கே. ரமா தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார்).

TMC (திரிணாமுல் காங்கிரஸ்): பி.வி. அன்வர் பேப்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பாளர் தேர்வு குறித்து வி.டி. சதீசன்

கேரளம் மாநில காங்கிரஸ் தலைவர் கே. சுதாகரன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த வி.டி. சதீசன், இது குறித்த முடிவை கட்சி மேலிடம் எடுக்கும் என்றும், ஊடகங்கள் இது தொடர்பாக வீண் யூகங்களை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மீதமுள்ள சுயேச்சை வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் ஒப்புதலுக்குப் பிறகு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலில் ஆளும் LDF Vs UDF இடையே நேரடிப்போட்டி

கேரள அரசியலில் நிலவும் மும்முனைப் போட்டியில், ஐக்கிய ஜனநாயக முன்னணி தனது தொகுதிப் பங்கீட்டை விரைவாக முடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆளும் இடதுசாரி முன்னணிக்கு (LDF) கடும் சவால் அளிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான இந்த கூட்டணி வியூகங்களை வகுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *