சென்னை,மார்ச்.20; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் களப்பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.
கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு என விறுவிறுப்படைந்துள்ள நிலையில், தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்று தவெக உறுதிபட அறிவித்துள்ளது.
தனித்து நின்று ஆட்சியா? கனவு காண்கிறார் விஜய்!
இந்நிலையில், சென்னையில் நேற்று (மார்ச் 19, வியாழன்) செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம், தவெகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், தவெக தற்போது குழப்பமான நிலையில் இருக்கிறது; தமிழ்நாடு அரசியலின் யதார்த்தம் என்னவென்றால், இங்கு யாரும் தனித்து நின்று ஆட்சி அமைக்க முடியாது என்பதேயாகும்; கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, அதேபோல் விஜய்யும் கனவு காண்கிறார் என்று தமிழிசை கிண்டலடித்தார்.
திமுக அரசு மீது தமிழிசை விமர்சனம்
தற்போதைய திமுக அரசு தமிழர்களின் அடையாளத்தைச் சிதைப்பதாகக் குற்றஞ்சாட்டினார். தமிழ்நாட்டில் ‘தமிழ்’ என்ற சொல்லையே மெல்ல மறைத்து, ‘திராவிடம்’ என்ற சொல்லைத் திணிப்பது தமிழுக்கு இழைக்கப்படும் அநீதி என்று அவர் குறிப்பிட்டார். மேலும், யுகாதி திருநாள் வாழ்த்துகளில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிவினையைத் தூண்டுவது வேதனைக்குரியது என்று சாடினார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை
பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துப் பேசிய தமிழிசை, கட்சியின் தேர்தல் அறிக்கை தயார் நிலையில் இருப்பதாகவும், அது மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டணி மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு
தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாகக் விமர்சித்த அவர், இது போன்ற விவகாரங்களில் வைகோ, திருமாவளவன் அல்லது கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏன் வாய் திறப்பதில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
தவெக தனித்து நின்று கரை சேருமா?
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழ்நாடு அரசியல் களம் கூட்டணிகளை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கருத்து, விஜய் போன்ற புதிய அரசியல் வருகையாளர்கள் எதிர்கொள்ள வேண்டிய சவால்களைச் சுட்டிக்காட்டுகிறது.
தமிழக வெற்றிக் கழகம் யாருடனும் கூட்டணி வைக்காது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளதால், தனித்து நின்று கரை சேருமா என்பதை அறிய தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
