Skip to content

காங்கிரசில் வன்னியருக்கு 5 சீட் கேட்டு நிர்வாகிகள் போர்க்கொடி; புதிய சிக்கல் தலை தூக்கியிருப்பதால் மேலிடத்திற்கு தலைவலி!

சென்னை,மார்ச்.22; தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தச் சூழலில், காங்கிரஸ் கட்சியின் உள்ளேயே வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து ஒரு புதிய கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் இல்லத்தில் அவரது மகனும் கடலூர் எம்.பியுமான விஷ்ணு பிரசாத் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று (மார்ச் 21, சனிக்கிழமை) நடைபெற்றது.

வன்னியருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் கோரும் நிர்வாகிகள்

இதில் காங்கிரஸில் உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சத்தியமூர்த்தி பவனிலிருந்து பல்வேறு தகவல்கள் கசிந்துள்ளன.

வன்னியருக்கு குறைந்தபட்சம் 5 சீட் ஒதுக்கக்கோரி போர்க்கொடி!

வன்னியருக்கு 5 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று, மயிலாப்பூர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் வலியுறுத்தாகத் தெரிகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தரப்பில் இந்தச் சமூகத்திற்கு ஒரே ஒரு சீட் மட்டுமே வழங்கப்பட்டது.

அதன்படி, விருத்தாசலம் தொகுதியில் எம்.ஆர். ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை சமூக நீதி அடிப்படையில், குறைந்தது 5 தொகுதிகளையாவது வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கு ஒதுக்க வேண்டும் என கிருஷ்ணசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் முறையீடு

அவரும் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் மொபைலில் பேசினார். அதற்கு கிரிஷ், ‘எங்களது கோரிக்கையைப் பரிசீலப்பதாக தெரிவித்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எம்.பி-க்கள் விஷ்ணு பிரசாத், சுதா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றுத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

“காங்கிரசில் வன்னியருக்கு போதிய முக்கியத்துவம் இல்லை”

வட மாவட்டங்களில் கணிசமாக உள்ள வன்னியர் சமூகத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் போதிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்ற ஆதங்கம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. தற்போது நடைபெறவுள்ள தேர்தலில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கட்சி மேலிடத்திற்கு வன்னியர் தரப்பு நிர்வாகிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

திமுக தொகுதிகள் ஒதுக்கிய பின்னர் இறுதி முடிவு

இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாடு காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் மேலிடப் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் மொத்த இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தே, இந்த 5 இடங்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், சமூக ரீதியான சமநிலையைப் பேணுவது கட்சிக்கு சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *