Skip to content

புதுச்சேரியை 2 முறை ஆண்ட அதிமுகவுக்கு 2 தொகுதிகள்…!! தவெக வேட்பாளர்களை இன்று அறிவிக்கிறார், விஜய்!

புதுச்சேரி,மார்ச்.22; புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக இடையே நிலவிவந்த தொகுதிப் பங்கீடு பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளபோதிலும், அம்மாநிலத்தை இரண்டு முறை ஆண்ட அதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகின்றது. அங்கு தற்போது ஆட்சியில் இருக்கும் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக மீண்டும் இணைந்து போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டுவிட்ட போதிலும், தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது.

என்ஆர் காங்கிரஸ் நிபந்தனையால் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி

அதிக இடங்களில் போட்டியிட விரும்புவதாக பாஜக விடுத்த கோரிக்கையை என்.ஆர். காங்கிரஸ் ஏற்கவில்லை. மேலும் தங்களது கட்சியே அதிக இடங்களில் போட்டியிடும் என்றும், கூட்டணியில் வேறு கட்சிகளை சேர்க்கக்கூடாது என்றும் என்.ஆர். காங்கிரஸ் நிபந்தனை விதித்தது.

நீண்ட இழுபறிக்குப் பின்னர் என்.ஆர். காங்கிரஸ்-தொகுதிப்பங்கீடு முடிவுக்கு வந்தது. அதன்படி, என்.ஆர்.காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 10 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

புதுச்சேரியை 2 முறை ஆண்ட அதிமுகவுக்கு 2 தொகுதிகள்

அதிமுகவுக்கு 2 தொகுதிகளும், புதுவரவான லட்சிய ஜனநாயகக் கட்சிக்கு 2 சீட்டுகளும் ஒதுக்கீடு செய்து, இழுபறி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

1974, 1977-78 என இரண்டு முறை புதுச்சேரியை ஆண்ட அதிமுக, இம்முறை வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவது கட்சியினரை அதிருப்தி அடையச் செய்துள்ளது. உப்பளம், உருளையன்பேட்டை ஆகிய அந்த 2 தொகுதிகளாகும்.

பாஜகவுக்கு இம்முறை 10 தொகுதிகள் (2021 தேர்தலில் 9 சீட்)

கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இம்முறை 3 தொகுதிகள் குறைக்கப்பட்டு, 2 சீட் மட்டும் ஒதுக்கப்பட்டது.

கூட்டணி தர்மம் உள்ளிட்டவற்றின் காரணமாக, 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகன் கூறியுள்ளார். கடந்த முறை 9 இடங்களில் போட்டியிட்ட பாஜகவுக்கு தற்போது கூடுதலாக ஒரு இடம் வழங்கப்பட்டுள்ளது.

தவெகவின் வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிப்பு

இதனிடையே, 30 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் விஜய்யின் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர்களின் பட்டியல் இன்று மாலை வெளியாகிறது.

வேட்பாளர் தேர்வு கடந்த 16ஆம் தேதி நடந்து முடிந்துவிட்ட சூழலில், அவர்கள், கடைசி தேதியான நாளைய தினம் (மார்ச் 23, திங்கள்) வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *