Skip to content

வென்ற தொகுதிகளிலிருந்து பின்வாங்கிய பாஜக! வட மாவட்டங்களில் ‘நஹி’..; தொகுதிகள் தேர்வு சொல்ல வருவது என்ன?

சென்னை,மார்ச்.26; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் 27 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி போட்டியிடவில்லை. மேலும், பெரும்பாலான வட மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜக களமிறங்கவில்லை.

2021ல் 20 இடங்களில் போட்டி; 4 இடங்களில் வெற்றி!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கோவை தெற்கு, அரவக்குறிச்சி, தாராபுரம், மொடக்குறிச்சி, நாகர் கோவில், நெல்லை, மதுரை வடக்கு, விளவங்கோடு, திட்டக்குடி, திருக்கோவிலூர், குளச்சல், துறைமுகம், காரைக்குடி, ராமநாதபுரம், உதகமண்டலம், திருவண்ணாமலை, தளி, திருவையாறு, ஆயிரம் விளக்கு, விருதுநகர் ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் நெல்லையில் நயினார் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்.ஆர்.காந்தி, மொடக்குறிச்சியில் சி.சரஸ்வதி, கோவை தெற்கில் வானதி சீனிவாசன் ஆகிய நால்வரும் வெற்றிபெற்றனர்.

2026 தேர்தலில் 27 இடங்களைப் பெற்றிருக்கும் பாஜக

இந்தச் சூழலில், 2026 தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் பாஜக, மயிலாப்பூர், ராசிபுரம் (தனி), உதகமண்டலம், கோவை வடக்கு, அவினாசி (தனி), தளி, ஆவடி, மொடக்குறிச்சி, விளவங்கோடு, ராதாபுரம், திருப்பூர் தெற்கு, தஞ்சாவூர், அறந்தாங்கி, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை (தனி), திருப்பத்தூர், சாத்தூர், மதுரை தெற்கு, திருச்செந்தூர், திருவண்ணாமலை, வாசுதேவநல்லூர் (தனி), நாகர்கோவில், திருவாரூர், பத்மநாபபுரம், குளச்சல், மானாமதுரை (தனி), ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் களமிறங்குகிறது.

2011-ல் போட்டியிட்டதில் 7 தொகுதிகளில் மட்டுமே மீண்டும் போட்டி!

இவற்றில், பாஜக 2021-ல் போட்டியிட்ட மொடக்குறிச்சி, நாகர்கோவில், குளச்சல், ராமநாதபுரம், தளி, திருவண்ணாமலை, உதகமண்டலம், விளவங்கோடு ஆகிய 7 தொகுதிகளை மட்டுமே மீண்டும் பெற்றுள்ளது.

நயினார், வானதி வென்ற தொகுதிகளில் பாஜக போட்டியில்லை!

குறிப்பாக, பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடந்த முறை வென்ற நெல்லை மற்றும் வானதி சீனிவாசன் வெற்றி பெற்ற கோவை தெற்கு ஆகிய தொகுதிகளில் இம்முறை அக்கட்சி போட்டியிடவில்லை.

மலியாப்பூர் தொகுதியில் தமி்ழிசை சௌந்தரராஜன் போட்டி எனத் தகவல்!

அதுமட்டுமின்றி அண்ணாமலை போட்டியிட்ட அரவக்குறிச்சி, ஹெச்.ராஜா போட்டியிட்ட காரைக்குடி, எல்.முருகன் போட்டியிட்ட தாராபுரம், குஷ்பு போட்டியிட்ட ஆயிரம் விளக்கு, வினோஜ்.பி.செல்வம் போட்டியிட்ட துறைமுகம் ஆகிய தொகுதிகளில் பாஜக இம்முறை களமிறங்கவில்லை. மயிலாப்பூர் தொகுதியில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடக்கூடும் எனப் பேசப்படுகின்றது.

அண்ணாமலை தேர்தலில் போட்டியிடவில்லை எனத் தகவல்!

இதில், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் ஆகியோர் வேறு தொகுதிகளுக்கு மாறுவார்கள் என்று பேச்சு அடிபடுகிறது. அதேபோல கரூரை சேர்ந்த அண்ணாமலையும் இப்போது கொங்கு மண்டலத்தில் உள்ள வேறு தொகுதியில் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், அவர் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்றொரு தகவலும் உலா வருகிறது.

கொங்கு மண்டலத்தில் 6 தொகுதிகளில் மட்டுமே போட்டி!

பாஜக தென் தமிழ்நாடு, கொங்கு மண்டலம், சென்னை மண்டல தொகுதிகளில் ஓரளவு செல்வாக்கு மிகுந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால், இம்முறை கொங்கு மண்டலத்திலும், மொடக்குறிச்சி, உதகமண்டலம், திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, அவினாசி (தனி), ஆகிய 6 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி போட்டியிடுகிறது. சென்னையிலும் மயிலாப்பூர் தொகுதியில் மட்டுமே களமிறங்குகிறது.

மத்திய மண்டலத்தில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடவில்லை!

அதேபோல, மத்திய மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளில் திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை (தனி), அறந்தாங்கி ஆகிய 5 தொகுதிகள் பாரதிய ஜனதாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 6 மாவட்டங்களில் ஓர் தொகுதியில் கூட போட்டியிடவில்லை. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் சொந்த மாவட்டமான கரூரிலும் எந்தத் தொகுதியையும் பாஜக கேட்டுப்பெறவில்லை.

9 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜக போட்டியில்லை!

முக்கியமாக, வட மண்டலத்தில் உள்ள கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தருமபுரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களில் ஒரு தொகுதியில் கூட பாஜக போட்டியிடவில்லை.

தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்களில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. அதில் கன்னியாகுமரியில் 4 தொகுதிகள், புதுக்கோட்டையில் 3 தொகுதிகள், சிவகங்கை மற்றும் திருப்பூரில் தலா 2 தொகுதிகளில் பாஜக களமிறங்கிறது.

தமிழ்நாடி முழுவதும் செல்வாக்கு உள்ளது எனக்கூறுகிறது, பாஜக!

தமிழ்நாடு முழுவதும் தங்களுக்கு செல்வாக்கு இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி சொல்லிக்கொண்டாலும், தற்போது பெற்றுள்ள தொகுதிகளின் அடிப்படையில் அந்தக் கட்சி, தென் மாவட்டங்களில்தான் அதிகம் போட்டியிடுகிறது. மற்றபடி, மத்திய மண்டலம், வட மண்டலம், சென்னை மண்டலத்தில் பாஜக மிக சொற்ப என்ணிக்கையில்தான் தொகுதிகளைப் பெற்றுள்ளது. பெரும்பாலும், காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளையே பாஜக தேர்ந்தெடுத்துள்ளது.

2021ல் 4 பேர் வெற்றி! 2 பேர் சொற்ப வாக்குகளில் வென்றனர்..!

கடந்த முறை 20 தொகுதிகளில் களம்கண்ட பாஜக வெறும் 4 தொகுதிகளில்தான் வென்றது. அதிலும், மொடக்குறிச்சியில் சரஸ்வதி 281 வாக்குகள் வித்தியாசத்திலும், கோவை தெற்கில் வானதி சீனிவாசன் 1,728 வாக்குகள் வித்தியாசத்திலும் தான் வெற்றி பெற்றனர்.

எனவே இம்முறை, எப்படியாவது இரட்டை இலக்க வெற்றியைப் பெறவேண்டும் என பாஜக உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில்தான் பாஜக தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *