சென்னை,மார்ச்.27; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகள், சாதிய உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தங்களது கூட்டணி மற்றும் ஆதரவு நிலைப்பாடுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) பெருந்தலைவர் மக்கள் கட்சி தனது நிபந்தனையற்ற ஆதரவை அறிவித்துள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வலுசேர்க்கும் முடிவு
பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்குத் தங்களது முழுமையான ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இதற்காகத் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அக்கட்சி தீவிரப் பரப்புரையில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
நாடார் சமுதாய வாக்குகளின் முக்கியத்துவம்
தமிழ்நாட்டு தேர்தலில் வெற்றித் தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக விளங்கும் நாடார் சமுதாய மக்களை ஒன்றிணைப்பதே இந்த முடிவின் முக்கிய நோக்கம் என்று என்.ஆர்.தனபாலன் குறிப்பிட்டுள்ளார்.
தென் மாவட்டங்களில் அடர்த்தியாகவும், மற்ற மாவட்டங்களில் பரவலாகவும் உள்ள நாடார் சமுதாய மக்கள், ஒவ்வொரு தொகுதியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டவர்கள்.
தமிழ்நாடு நாடார் பேரவையுடன் இணைந்து, இந்த வாக்குகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாகத் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணி மற்றும் மாவட்ட வாரியான வியூகம்
தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 54 மாவட்ட நிர்வாகிகளுக்கும் பிரத்யேக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் களப்பணிகள் அமைய வேண்டும் எனத் தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இபிஎஸ்-க்கு கூடுதல் பலம் தரும் ஆதரவு
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில் பெருந்தலைவர் மக்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் இக்கூட்டணிக்கு இது கூடுதல் பலத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
