Skip to content

இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடா? மீண்டும் ‘முழு முடக்கம்’ வருமா? பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை!

டெல்லி,மார்ச்.27; மேற்கு ஆசியாவில் (மத்திய கிழக்கு நாடுகள்) நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ளன. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கும் என்ற அச்சத்தில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் (Lock Down) ‘முழு முடக்கம்’ குறித்த வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பிரதமர் மோடி மற்றும் மாநில முதல்வர்கள் ஆலோசனை

பிரதமர் நரேந்திர மோடி, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் இன்று (மார்ச் 27, வெள்ளிக்கிழமை) ஆன்- லைன் வாயிலாக ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். மேற்கு ஆசியப் போரினால் இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கையாள்வது குறித்து இதில் விவாதிக்கப்பட உள்ளது. குறிப்பாக, எரிபொருள் மற்றும் உரங்களின் இருப்பு குறித்து மத்திய அரசு மாநிலங்களுக்கு விரிவான விளக்கங்களை அளிக்கவுள்ளது.

இந்தியாவில் மீண்டும் முழு முடக்கமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

சமீபகாலமாக “மீண்டும் முழு முடக்கம் அமலாகுமா?” என்ற தேடல்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசும்போது கொரோனா கால சவால்களைக் குறிப்பிட்டதைச் சிலர் தவறாகப் புரிந்துகொண்டதே இதற்குக் காரணம்.

உண்மை என்ன?: பிரதமர் மோடி ‘லாக்டவுன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. கோவிட் பெருந்தொற்றை இந்தியா எப்படி ஒற்றுமையாக எதிர்கொண்டதோ, அதே போன்ற மன உறுதியுடன் தற்போதைய உலகளாவிய நெருக்கடியையும் எதிர்கொள்ள வேண்டும் என்றே அவர் வலியுறுத்தினார்.

இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, முழு முடக்கம் மீண்டும் வருகிறது என்கிற ரீதியில் சமூகவலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

எரிபொருள் இருப்பு: கவலை வேண்டாம் என்கிறது அரசு

பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி (LPG) சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற பீதியில் மக்கள் சில இடங்களில் முண்டியடித்துக் கொண்டு எரிபொருளை நிரப்பி வருகின்றனர். இதைத் தவிர்க்குமாறு எண்ணெய் நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன.

60 நாட்கள் இருப்பு: இந்தியாவில் அடுத்த 60 நாட்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டு உற்பத்தி: எல்பிஜி தேவையைக் குறைக்க உள்நாட்டு எரிவாயு உற்பத்தி 60% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை: இந்தப் போர் பதற்றத்திலும் இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணை வழியாக வந்து கொண்டிருப்பதை ஒரு ‘ராஜதந்திர வெற்றியாக’ மத்திய அரசு பார்க்கிறது.

எதிர்க்கட்சிகளின் கேள்வி மற்றும் மாநிலங்களின் கோரிக்கை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசின் வெளியுறவுக் கொள்கை மற்றும் நெருக்கடியைச் சமாளிக்கும் விதம் குறித்துக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதற்கிடையில், மேகாலயா போன்ற மாநிலங்கள் தங்களுக்கு எல்பிஜி விநியோகத்தை 50-60% அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன.

சவால்களை எதிர்கொள்ள தயாராக உள்ளது இந்தியா

மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்தை அச்சுறுத்தினாலும், இந்தியா போதுமான எரிபொருள் கையிருப்புடன் தயாராகவே உள்ளது. தேவையற்ற பீதியால் மக்கள் எரிபொருளைப் பதுக்குவதைத் தவிர்க்க வேண்டும். அரசு அமைத்துள்ள 7 உயர்நிலை குழுக்கள் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதால், தற்போதைக்கு முழு முடக்கம் அல்லது கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு குறித்த அச்சம் தேவையில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *