Skip to content

பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்; தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தவெக தலைவர் விஜய் புகார் மனு!

சென்னை,மார்ச்.29; திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் சிலர் திட்டமிட்டே தனது பரப்புரைக்கு இடையூறு செய்வதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் தவெக தலைவர் விஜய் மனு கொடுத்துள்ளார்.

தவெக வேட்பாளர்களை நேற்று அறிமுகம் செய்ய ஏற்பாடுகள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சென்னையில் அக்கட்சித் தலைவர் விஜய் நேற்று (மார்ச் 28, சனிக்கிழமை) வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

ஆனால், நிகழ்ச்சியை நடத்துவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக முறைப்படி விண்ணப்பித்தால் மட்டுமே அனுமதி தரப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இதன்காரணமாக, தவெக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியை நேற்று நடத்த இயலவில்லை.

வேட்பாளர்கள் இன்று அறிமுகம் என்று அறிவிப்பு

அதே ஓட்டலில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் அறிமுகம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அந்த தொகுதிக்கு உட்பட்ட எம்கேபி நகர் முல்லை நகர் பகுதியில் நேற்று முன்தினம் (மார்ச் 27, வெள்ளி) பரப்புரையைத் தொடங்கவும் விஜய் திட்டமிட்டிருந்தார்.

பெரம்பூரில் பரப்புரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகப் புகார்

இதற்கு அனுமதி கேட்டு தேர்தல் அலுவலரிடம் கடிதமும் கொடுக்கப்பட்டது. கூட்டத்தில் 3 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என்று விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட இடத்தில் அதிகபட்சம் 300 பேர் வரை மட்டுமே நிற்க முடியும் என்பதால், அது பரப்புரைக் கூட்டம் நடத்த ஏற்ற இடமல்ல என்று கூறி அதிகாரிகள் அனுமதி மறுத்தனர்.

இதற்கு விஜய் கடும் கண்டனம் தெரிவித்தார். ‘சென்னையில் தவெக சார்பில் திட்டமிட்டப்பட்ட பரப்புரைக் கூட்டத்துக்கு மாநகரக் காவல் துறையும், அதிகாரிகள் சிலரும் இணைந்து முட்டுக்கட்டை போட்டது ஜனநாயகம் மீதான தாக்குதல். முல்லை நகரில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு 2 நாட்கள் முன்பே அனுமதி கோரப்பட்டது.

அரசு ஏதேதோ காரணம் கூறி, தவெக பரப்புரையை தடுக்கிறது

திடீரென கூட்டத்துக்கு ஒருநாள் முன்பு அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு, இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. நான் பரப்புரை மேற்கொள்ள முயற்சிக்கும்போதெல்லாம், திமுக அரசு ஏதேதோ காரணம் கூறி அனுமதியை தாமதிப்பதும், அனுமதி மறுப்பதும் தொடர்கதை ஆகிவருகிறது. திமுக அரசு திட்டமிட்டு எனது பரப்புரையை முடக்குகிறது என்று குற்றஞ்சாட்டியிருந்தார்.

திடீர் பள்ளம்- விளக்கமளித்த மாநகராட்சி நிர்வாகம்

அதேநேரம், ‘அந்த இடத்தில் மாநகராட்சி சார்பில் எந்த பணியும் மேற்கொள்ளப்படவில்லை. குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு உடனடியாக சரிசெய்யப்பட்டது’ என்று மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது. இதற்கிடையே, பரப்புரைக்கு வேறு இடத்தை தேர்வு செய்தால் பரிசீலிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, பெரம்பூரில் வேறு இடத்தை குறிப்பிட்டு தேர்தல் ஆணையத்தில் தவெக மனு அளித்துள்ளது.

தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் விஜய் புகார் மனு

இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்துக்கு வந்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து, புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், ‘தவெக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பரப்புரை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்கவேண்டும். அதிகாரிகள் சிலர், திமுகஅரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். அவர்கள்தான் திட்டமிட்டே பரப்புரைக்கு இடையூறு செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. விஜய் திடீரென தலைமைச் செயலகம் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

விஜய்க்கு கூட்டம் கூடுவதால் திமுக அரசுக்கு அச்சம்

இதுகுறித்து தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் கூறும்போது, ‘‘விஜய் வெளியில் வந்தாலே கூட்டம் கூடுகிறது. இந்த அச்சத்தில்தான் அவரை பரப்புரை செய்ய விடாமல் தடுக்கின்றனர். அதை சட்டப்படி தகர்த்து வருகிறோம். அந்த வகையில், பெரம்பூரில் பரப்புரைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். அனுமதி கொடுக்காததால், தலைமைத் தேர்தல் அதிகாரியை சந்தித்து விஜய் மனு கொடுத்துள்ளார்’’ என்று தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் நாளை (மார்ச் 30, திங்கள்) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *