Skip to content

தமிழ்நாடு தேர்தல் களம்; கொளத்தூரில் ஸ்டாலின், பெரம்பூரில் விஜய் – வேட்புமனு தாக்கல்!

சென்னை,மார்ச்.30; தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான கட்டமாகப் பார்க்கப்படும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இதனை உறுதிசெய்தும் வகையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் இன்று (மார்ச் 30, திங்கள்) தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

கொளத்தூரில் மு.க. ஸ்டாலின்: 4-வது முறையாகப் போட்டி

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார். 2011 முதல் தொடர்ந்து மூன்று முறை இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அவர், தற்போது 4-வது முறையாக அதே தொகுதியில் களம் காண்கிறார்.

மனுத் தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது ஆட்சிக் காலத்தில் கொளத்தூர் தொகுதியில் செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் திறந்த வாகனத்தில் சென்று பொதுமக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரம்பூரில் விஜய்: தேர்தல் அரசியலில் முதல் அடி

திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், தனது ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியின் சார்பில் முதல்முறையாகத் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார். அவர் சென்னை பெரம்பூர் தொகுதியில் இன்று (மார்ச் 30, திங்கள்)வேட்புமனு தாக்கல் செய்தார். விஜய்யின் வருகையை ஒட்டி பெரம்பூர் பகுதியில் அவரது தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

விஜய் பெரம்பூர் மட்டுமின்றி, திருச்சி கிழக்கு தொகுதியிலும் போட்டியிடுகிறார். வடசென்னையின் முக்கிய தொகுதியான பெரம்பூரில் திமுகவின் ஆர்.டி.சேகரை எதிர்த்து விஜய் களம் காண்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதிர்ந்த அரசியல் Vs மலர்ந்த மொட்டு மோதல்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அனுபவத்திற்கும், நடிகர் விஜய்யின் புதிய அரசியல் வருகைக்கும் இடையே நடக்கும் இந்தப் போட்டி தமிழ்நாடு அரசியலில் ஒரு புதிய முக்கோணப் போட்டியை (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக) உருவாக்கியுள்ளது. மக்களின் ஆதரவு யாருக்கு என்பது மே 4-ம் தேதி தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *