Skip to content

பந்து சேதப்படுத்தப்பட்ட சர்ச்சை! கேமராவில் சிக்கிய பாகிஸ்தான் நட்சத்திர வீரர்கள்!

இஸ்லாமாபாத்,மார்ச்.30; பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில், லாகூர் கலாண்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ‘பந்து சேதப்படுத்தப்பட்ட’ (Ball-tampering) விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் வீடியோவில் பதிவாகியுள்ள நிலையில், முன்னணி வீரர்கள் சிக்கியிருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைதானத்தில் நடந்தது என்ன?

லாகூர் கலாண்டர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், கராச்சி கிங்ஸ் வெற்றி பெற கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பந்து வீச வந்த ஹாரிஸ் ரவூஃப், கேப்டன் ஷாஹீன் அப்ரிடி மற்றும் ஃபகார் ஜமான் ஆகிய மூவரும் இணைந்து ஆலோசனை நடத்தினார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் பந்தை கையாண்ட விதம் நடுவர்களின் கவனத்தை ஈர்த்தது.

இதனையடுத்து, கள நடுவர்கள் ஃபைசல் அப்ரிடி மற்றும் ஷர்புதுல்லா ஆகியோர் பந்தை ஆய்வு செய்தனர். பந்தின் நிலை வேண்டுமென்றே மாற்றப்பட்டிருப்பதாகக் கருதிய நடுவர்கள், உடனடியாக கராச்சி கிங்ஸ் அணிக்கு 5 பெனால்டி ரன்களை வழங்கினர். மேலும், பழைய பந்தை மாற்றி புதிய பந்தை வழங்கினர்.

ஃபகார் ஜமான் மீது ஒழுங்கு நடவடிக்கை

இந்த விவகாரத்தில் லாகூர் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஃபகார் ஜமான் மீது லெவல்-3 (Level 3) குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய (PCB) விதிகளின்படி, பந்தின் தன்மையை மாற்ற முயற்சிப்பது கடுமையான குற்றமாகும். இது தொடர்பாக நடைபெற்ற முதற்கட்ட விசாரணையில் ஃபகார் ஜமான் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். எனினும், அடுத்த 48 மணி நேரத்திற்குள் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் ஷாஹீன் அப்ரிடி அதிருப்தி

நடுவர்களின் இந்தத் முடிவால் அதிருப்தியடைந்த லாகூர் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி, போட்டிக்குப் பிறகு பேசியபோது, “நடுவர்கள் ஏன் பந்தை மாற்றினார்கள் என்று தெரியவில்லை. நாங்கள் விளக்கம் கேட்டபோது எங்களை விலகிச் செல்லச் சொன்னார்கள். வீடியோ ஆதாரங்களைச் சரிபார்த்துவிட்டு இது குறித்துப் பேசுவோம்” எனத் தெரிவித்தார்.

இருப்பினும், முன்னாள் வீரர்கள் பாசித் அலி மற்றும் கம்ரான் அக்மல் ஆகியோர், ஆதாரங்கள் தெளிவாக இருப்பதால் சம்பந்தப்பட்ட வீரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

போட்டியின் முடிவு

5 பெனால்டி ரன்கள் கிடைத்ததால் கராச்சி அணியின் இலக்கு எளிதானது. கடைசி ஓவரில் அப்பாஸ் அப்ரிடி ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி விளாச, கராச்சி கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

பந்தை சேதப்படுத்திய விவகாரம்; முன்னணி வீரர்களே தடை பெற்றனர்

கிரிக்கெட்டின் கண்ணியத்தைக் காக்க ஐசிசி மற்றும் அந்தந்த நாட்டு வாரியங்கள் பந்து சேதப்படுத்தும் விவகாரத்தில் கடும் விதிகளைப் பின்பற்றி வருகின்றன. ஸ்மித் மற்றும் வார்னர் போன்ற ஜாம்பவான்களே இதுபோன்ற புகார்களில் சிக்கித் தடை பெற்ற நிலையில், பாகிஸ்தான் வீரர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப்போகிறது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *