Skip to content

ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் தொகுதியில் விஜய்யின் பரப்புரை ரத்து; தவெக தொண்டர்கள் ஏமாற்றம்!

சென்னை,மார்ச்.30; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மார்ச் 30, 2026) தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய், இன்று பெரம்பூரில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்த கையோடு பரப்புரையை ஆரம்பித்தார்.

கொளத்தூரில் ஏற்பட்ட நெரிசல் மற்றும் தொழில்நுட்பக் கோளாறு

பெரம்பூர் பரப்புரையை முடித்துக் கொண்டு விஜய் நேராக கொளத்தூர் தொகுதிக்குச் சென்றார். அங்கு அவரைப் பார்க்க வழிநெடுகிலும் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொளத்தூரில் விஜய் பேசத் தொடங்கியபோது, திடீரென ஆடியோ (ஒலிபெருக்கி) பிரச்னைகள் ஏற்பட்டன. இதன் காரணமாக, தனது உரையைச் சுருக்கிக் கொண்ட அவர், வெறும் 4 நிமிடங்களில் பரப்புரையை முடித்துவிட்டு வில்லிவாக்கம் நோக்கிப் புறப்பட்டார்.

வில்லிவாக்கம் பரப்புரை ரத்து செய்யப்பட்டது ஏன்?

வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக ஆதவ் அர்ஜுனா போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக விஜய் இன்று வாக்கு சேகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களால் அந்தப் பரப்புரை திடீரென ரத்து செய்யப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

பாதுகாப்பு குறைபாடு காரணமாக ரத்து என தவெக விளக்கம்

இது குறித்து விளக்கமளித்துள்ள தவெக மாவட்ட செயலாளர் பூக்கடை முருகன், “விஜய்யின் வாகனத்தைச் சுற்றி கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால், வாகனம் அங்குலம் அங்குலமாகவே நகர முடிந்தது. பாதுகாப்பு குறைபாடு காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. விஜய் மீண்டும் மற்றொரு நாளில் வில்லிவாக்கத்திற்கு வந்து பரப்புரை செய்வார்” என்று தெரிவித்துள்ளார்.

விஜய்யைப் பார்ப்பதற்காக மணிக்கணக்கில் காத்திருந்த வில்லிவாக்கம் தொகுதி தொண்டர்களும் பொதுமக்களும் இந்த அறிவிப்பால் பெரும் ஏமாற்றமடைந்தனர். பிரசாரம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விஜய் நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.

முதல் நாளிலேயே விஜய்க்கு கிடைத்துள்ள வரவேற்பு!

தேர்தல் பிரசாரத்தின் முதல் நாளிலேயே விஜய்க்கு கிடைத்திருக்கும் இந்த பிரமாண்ட வரவேற்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் சரிசெய்யப்பட்ட பிறகு, மீண்டும் வில்லிவாக்கத்தில் விஜய் எப்போது பிரசாரம் செய்வார் என்பதை அறிய அவரது ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *