காரைக்குடி,மார்ச்.30; 234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
முதல் நாளன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட பலரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
காரைக்குடியைத் தேர்வு செய்தது ஏன்?
கடந்த தேர்தல்களில் கடலூர் மற்றும் சென்னை திருவொற்றியூரில் போட்டியிட்ட சீமான், இந்த முறை காரைக்குடி தொகுதியைத் தேர்ந்தெடுத்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தின் முக்கிய தொகுதியான காரைக்குடியில் கல்வி நிறுவனங்களும், பாரம்பரியமிக்க செட்டிநாடு கலாச்சாரமும் செழுமையாக உள்ளன. இங்குள்ள மக்களின் ஆதரவைப் பெற்று சட்டப்பேரவைக்குள் நுழைய வேண்டும் என்ற இலக்கோடு சீமான் களம் இறங்கியுள்ளார்.
உற்சாகமாக வந்த தொண்டர்கள்
இன்று காலை காரைக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்குத் தனது ஆதரவாளர்களுடன் வருகை தந்த சீமான், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறைப்படி வேட்புமனுவை வழங்கினார். முன்னதாக, கட்சித் தொண்டர்கள் வழிநெடுகிலும் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். “வெல்லட்டும் விவசாயி” என்ற முழக்கங்கள் அப்பகுதி முழுவதும் எதிரொலித்தன.
மாற்றத்திற்கான முன்னெடுப்பு
வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “திராவிட மற்றும் தேசிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் எங்களை எதிர்பார்க்கிறார்கள். ஊழலற்ற, தூய்மையான அரசியலை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறது. காரைக்குடி மக்கள் மாற்றத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது,” என்று தெரிவித்தார்.
“ஆட்சிக்கு வந்தால் ரூ.2 ஆயிரம், ரூ.2500, ரூ.3000 தருவதாக தலைவர்கள் வாக்குறுதி அளிக்கின்றனர். படித்துவிட்டு வேலையில்லாதவனுக்கு வேலை கொடுப்பதற்கு பதிலாக, ரூ.4 ஆயிரம் தருவதாக சொல்பவர் எப்படி நல்ல தலைவராக இருக்க முடியும்” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
டாஸ்மாக் கடைகளை மூடுவதாக ஒருவரும் வாக்குறுதி தரவில்லையே?
டாஸ்மாக் கடையை மூடுவதாக ஒருவருமே வாக்குறுதி அளிக்கவில்லையே; பத்தரை லட்சம் கோடி ரூபாய் கடன் இப்போதே உள்ளது; இப்போது நீங்கள் அளித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற மேலும் பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குவீர்கள்; கடன் வாங்கி நிறைவேற்றிய எந்த திட்டமாவது தரமாக உள்ளதா? என்றும் அவர் வினவினார்.
சீமான் போட்டி; நட்சத்திர அந்தஸ்து பெற்ற காரைக்குடி!
காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டியிடுவதால், இந்தத் தொகுதி தற்போது நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுடன் சீமான் நேருக்கு நேர் மோதும் நிலை உருவாகியுள்ளதால், தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது. காரைக்குடி மண்ணில் சீமான் விதைத்துள்ள இந்தத் தேர்தல் விதை, அறுவடையாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
