Skip to content

தருமபுரியில் பரபரப்பு; சௌமியா அன்புமணிக்கு எதிராக வேட்பாளரை களமிறக்கிய மருத்துவர் ராமதாஸ்!

சென்னை,ஏப்.01; வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸ், அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். சசிகலா நேற்று முன்தினம் (மார்ச் 30, திங்கள்) 21 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டார்.

இதுபோன்ற சூழலில், முதற்கட்டமாக 5 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை நேற்று வெளியிட்ட ராமதாஸின் பாமக, மேலும் 10 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட பட்டியலை இன்று (ஏப்ரல் 1, புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

மருமகள் சௌமியாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்திய மாமனார் ராமதாஸ்

இந்த வேட்பாளர் பட்டியலில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய முடிவு தருமபுரி தொகுதியாகும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தலைமையிலான பாமக சார்பில், அவரது மனைவி சௌமியா அன்புமணி தருமபுரியில் போட்டியிடுகிறார்.

அவருக்கு எதிராக ராமதாஸ் தரப்பு சரவணன் என்ற வேட்பாளரை களமிறக்கியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் இரு பிரிவுகளுக்கும் இடையிலான நேரடிப் போட்டி இந்தத் தொகுதியை ஒரு நட்சத்திரத் தொகுதியாக மாற்றியுள்ளது.

இவர் தவிர மற்ற 9 தொகுதிகளில் ராமதாஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு;

திருப்போரூர் – என்.எஸ்.ஏகாம்பரம்

உத்திரமேரூர் – சு.ஸ்ரீதர்

ஜெயங்கொண்டம் – காடுவெட்டி ரவி

கும்மிடிப்பூண்டி – எஸ்.டி.கே.சங்கர்

செய்யாறு – தி.கா.சீனிவாசன்

திருவள்ளூர் – நா.வெங்கடேசன்

செஞ்சி – கனல்

அந்தியூர் –எஸ்.சி.ஆர்.கோபால்

புவனகிரி – எம்.ஆர்.பாலமுருகன்

பிற தொகுதிகளில் நிலவும் கடும் போட்டி

தர்மபுரி ஒருபுறம் இருக்க, அன்புமணி தரப்பு பாமக மற்ற தொகுதிகளிலும் பலமான வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. பெரம்பூரில் தவெக தலைவர் விஜய்யை எதிர்த்து திலகபாமாவும், விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை எதிர்த்து டாக்டர் தமிழரசியும் களமிறக்கப்பட்டுள்ளனர்.

வெற்றி தந்தைக்கா, மகனுக்கா யாருக்கு?

2026 சட்டப்பேரவைத் தேர்தல் கட்சிகளின் செல்வாக்கை நிரூபிப்பதற்கான ஒரு கௌரவப் போராட்டமாக மாறியுள்ளது. தருமபுரியில் சௌமியா அன்புமணியின் செல்வாக்கு எடுபடுமா அல்லது ராமதாஸின் நேரடி வேட்பாளர் சரவணன் அவருக்குச் சவாலாக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *