சென்னை, ஏப்.02: தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. வேட்புமனு தாக்கல் வரும் 6ஆம் தேதி முடிவடைகிறது. கடந்த 2 நாட்கள் விடுமுறை என்பதால் , இன்றைய தினம் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அரசியல் கட்சிகளின் பரப்புரையும் வேகமெடுத்துள்ளது.
இதுபோன்ற சூழலில், தேர்தல் பரப்புரையில் ஈடுபடுவதற்காக இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஏப்ரல் 3, வெள்ளி) சென்னை வருகிறார். அவரது வருகையை முன்னிட்டு சென்னையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இரு நாள் பயணமாக சென்னை வரும் பிரதமர்
பிரதமர் நரேந்திர மோடி நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய இரண்டு நாட்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக நாளை பிற்பகல் 3.20 மணிக்கு தனி விமானம் மூலம் அவர் சென்னை வந்தடைகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகிறார்.
பாஜக தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை
புதுச்சேரி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை (ஏப்ரல் 3, வெள்ளி) மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி மீண்டும் சென்னை திரும்புகிறார். நாளை இரவு சென்னை கிண்டியில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கும் அவர், தமிழ்நாடு பாஜகவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்கள் மற்றும் கூட்டணி குறித்த ஆலோசனைகளை அவர் மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது.
3,000 போலீசார் பாதுகாப்பு – சென்னை ‘சிவப்பு மண்டலம்’
பிரதமரின் வருகையையொட்டி சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவின் பேரில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: பிரதமர் செல்லும் பாதைகளில் ஒவ்வொரு 10 அடிக்கும் ஒரு காவலர் வீதம் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
சிவப்பு மண்டலம்: பாதுகாப்பு காரணங்களுக்காக கிண்டி மற்றும் மீனம்பாக்கம் பகுதிகள் ‘சிவப்பு மண்டலமாக’ (Red Zone) அறிவிக்கப்பட்டுள்ளன.
டிரோன் தடை: கிண்டி மற்றும் மீனம்பாக்கம் பகுதிகளில் டிரோன்கள் அல்லது இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
நாளை மறுதினம் (ஏப்ரல் 4, சனிக்கிழமை) பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் மோடி சென்னையில் இருந்து கேரளாவுக்குப் புறப்பட்டுச் செல்கிறார்.
மோடி வருகை; பாஜகவினர் உற்சாகம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் பிரதமரின் இந்த சென்னை வருகை அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பாஜகவினரிடையே இந்த வருகை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமரின் ஆலோசனைகள் தமிழ்நாடு அரசியலில் எந்த மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
