சென்னை,ஏப்.03; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி ஒரு வழியாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. இதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் களம் மற்றும் தொகுதிப் பங்கீடு
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இம்மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர்களின் முக்கியப் பட்டியல்
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வேட்பாளர்கள் விவரம் பின்வருமாறு;
- பொன்னேரி (தனி): துரை சந்திரசேகர்
- வேளச்சேரி: ஜெ.எம்.எச். அசன் மௌலானா
- ஸ்ரீபெரும்புதூர் (தனி): செல்வப்பெருந்தகை
- சோளிங்கர்: ஏ.எம்.முனிரத்தினம்
- ஊத்தங்கரை (தனி): குப்புசாமி
- கிருஷ்ணகிரி: மருத்துவர் ஏ.செல்லகுமார்
- பென்னாகரம்: ஜி.கே.எம். தமிழ்குமரன்
- ஆத்தூர் (தனி): எஸ்.கே.அர்த்தநாரி
- ஈரோடு கிழக்கு: கோபிநாத் பழனியப்பன்
- உதகமண்டலம்: பி.ராமச்சந்திரன்
- கவுண்டம்பாளையம்: கே.பி.சூர்யபிரகாஷ்
- சிங்காநல்லூர்: வி.ஸ்ரீநிதி நாயுடு
- துறையூர் (தனி): விச்சு லெனின் பிரசாத்
- கடலூர்: ஏ.எஸ்.சந்திரசேகரன்
- மயிலாடுதுறை: ஜமால் யூனுஸ் முகமது
- அறந்தாங்கி: டி.ராமச்சந்திரன்
- காரைக்குடி: எஸ்.மாங்குடி
- உசிலம்பட்டி: டி.சரவணகுமார்
- சிவகாசி: கணேசன் அசோகன்
- திருவாடானை: ராம கருமாணிக்கம்
- ஸ்ரீவைகுண்டம்: ஊர்வசி அமிர்தராஜ்
- சங்கரன்கோவில் (தனி): சங்கை கணேசன்
- அம்பாசமுத்திரம்: வி.பி.துரை
- நாங்குநேரி: ரூபி மனோகரன்
- குளச்சல்: தாரகை கத்பர்ட்
- விளவங்கோடு: டி.டி.பிரவீன்
- கிள்ளியூர்: எஸ்.ராஜேஷ் குமார்
- மேலூர்: –—-
நிலுவையில் உள்ள தொகுதி
மொத்தமுள்ள 28 இடங்களில் 27 இடங்களுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மதுரை மேலூர் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அந்தத் தொகுதிக்கான அறிவிப்பு இன்று (ஏப்ரல் 3,வெள்ளி) இரவுக்குள் வெளியாகும் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.
4 தொகுதிகளில் காங்கிரஸ்-பாஜக மோதல்
வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-பாஜக 4 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. அதன் விவரம் பின்வருமாறு:
- உதகமண்டலம்: போஜராஜன் (பாஜக) VS பி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்)
- அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த் (பாஜக) VS டி.ராமச்சந்திரன் (காங்கிரஸ்)
- குளச்சல்: சிவகுமார் (பாஜக) VS தாரகை கத்பர்ட் (காங்கிரஸ்)
- விளவங்கோடு: விஜயதாரணி (பாஜக) VS டி.டி.பிரவீன் (காங்கிரஸ்)
ஒரு வாரத்திற்கு முன்னர் சேர்ந்தவருக்கு போட்டியிட வாய்ப்பு!
காங்கிரஸ் கட்சியில் ஒரு வாரத்திற்கு முன்னர் இணைந்த ஜி.கே.எம்.குமரனுக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்பபு அளிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏவின் மகனான தமிழ்குமரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக உள்ளார்.
விறுவிறுப்பான தேர்தல் பரப்புரை
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி
ஆகியோர் முன்னிலையில் இறுதி செய்யப்பட்ட இந்தப் பட்டியலில், அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, அந்தந்த தொகுதிகளில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் தேர்தல் பணிகளைத் தொடங்கவுள்ளனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த வேட்பாளர் அறிவிப்பு தேர்தல் களத்தை மேலும் சூடுபிடிக்க வைத்துள்ளது. கூட்டணி பலத்துடன் களம் காணும் காங்கிரஸ், இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.
