சென்னை,ஏப்.03; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக-வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீண்ட இழுபறிக்குப் பின்னர் பாஜகவின் 27 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் இன்று (ஏப்ரல் 3, வெள்ளி) வெளியானது. இதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விசயம் என்னவென்றால், கட்சியின் முக்கிய முகமாக அறியப்படும் முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் பெயர் இடம்பெறாததுதான்.
அண்ணாமலை ஏன் போட்டியிடவில்லை?
பாஜக மேலிடம் அண்ணாமலையை மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அண்ணாமலை தரப்பில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டப்பட்டுள்ளது. தற்போது கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக இருக்கும் வானதி சீனிவாசனுக்கு கோவை வடக்கு ஒதுக்கப்பட்டதால், தனக்கு விருப்பமான தொகுதி கிடைக்காத காரணத்தினால் அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொண்டனாக களப்பணி ஆற்றுவேன்: அண்ணாமலை விளக்கம்
தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும், வேட்பாளர்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அண்ணாமலை, தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் ஒரு முக்கியப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாக அனைத்து வேட்பாளர்களுக்காகவும் தோளோடு தோள் நின்று பரப்புரை செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலில் எத்தகைய தாக்கம் ஏற்படும்?
அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாதது அவரது ஆதரவாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும், அவர் மாநிலம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளது அவரது ஆதரவாளர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. இது தேர்தலில் பாஜக – அதிமுக கூட்டணி எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
