சென்னை,ஏப்.04; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு, பரப்புரை தீவிரமடைந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் (ஏப்ரல் 6, திங்கள்) முடிவடைய உள்ளதால், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் விஜய் ஆகியோரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.
திமுக நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தல்
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளார்.
இதுபோன்ற சூழலில், ஸ்டாலின் தலைமையில் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக நேற்று (ஏப்ரல் 3, வெள்ளி) நடைபெற்றது.
இதில் மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள், பகுதிச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
பரப்புரையில் மெத்தனம் கூடாது; சுறுசுறுப்பாக பணியாற்றுக
இந்த கூட்டத்தில் தொகுதிகளில் இதுவரை செய்யப்பட்ட பணிகள், அடுத்தகட்ட நடவடிக்கைகள், பூத் கமிட்டிகளின் நிலையை ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
அப்போது தேர்தலுக்கு இன்னும் குறைந்த கால அவகாசமே உள்ளதால், நிர்வாகிகள் மெத்தனமாக இருக்காமல் பரப்புரையை தீவிரப்படுத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
வெற்றி ஒன்றே இலக்கு, செயல் வீரர்களுக்குப் பாராட்டு
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘வெற்றி ஒன்றே இலக்கு, ஓய்வின்றி உழைக்கும் கட்சியின் செயல்வீரர்களுக்குப் பாராட்டுகள்; நேற்று இரவு கோவையில் முதற்கட்ட பரப்புரை பயணத்தை முடித்துவிட்டு, சென்னைக்கு திரும்பினேன்; இன்று காலை (ஏப்ரல் 4, 2026) தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி மக்களின் நம்பிக்கையை வாக்குகளாக உறுதி செய்துவரும், கட்சி நிர்வாகிகளுடன் உரையாடி அவர்களை ஊக்கப்படுத்தினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
நீண்ட நாட்களாக இழுபறியிலிருந்த காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியலும் நேற்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், அவர்களும் தீவிர பரப்புரையில் இறங்குவார்கள் என நம்பப்படுகிறது.
திமுகவில் இணைந்த அமுமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் 2 பேர்
இதனிடையே, அமமுக முன்னாள் எம்எல்ஏ-க்களான சி.கோபால், என்.ஜி.பார்த்திபன் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் நேற்று (ஏப்ரல் 3, வெள்ளி) திமுக-வில் இணைந்தனர். இவர்கள் இருவரும் டிடிவி.தினகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் எனவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்காத அதிருப்தியில் திமுக-வில் இணைந்ததாகவும் கூறப்படுகிறது.
