சென்னை,ஏப்.04; நடிகர் விஜய் தொடங்கியிருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி, வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
நடிகர் விஜய்க்கு இளைய தலைமுறையின் வாக்கு அதிகம் கிடைக்கும் என்று கணிக்கப்படுகிறது. அதேவேளையில், இளைய தலைமுறையினர் அதிகம் உலாவும் சமூக வலைதளங்களில் விஜய்யை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.
இரண்டே ஆண்டுகளில் முதலமைச்சராக ஆசையா?
கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் ஆட்சிக்கட்டிலில் அமர ஆசைப்படலாமா? எவ்வித கொள்கை கேட்பாடும் இல்லாமல் தவெக சென்று கொண்டிருப்பதாகவும் விமர்சிக்கப்படுகிறது.
திரைத்துறையில் விஜய்க்கு ஆதரவாக சிலர் கருத்துகளை கூறிவந்தாலும், ஒரு சிலர் அவரை விமர்சனம் செய்தும் வருகின்றனர்.
கேள்விக்கணைகளால் விஜய்யை துளைக்கும் இயக்குநர் சேரன்
அந்த வரிசையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சேரன், விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சமீபத்தில் நாம் தமிழர் கட்சிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருந்த இயக்குநர் சேரன், தற்போது தனது எக்ஸ் தளத்தில் விஜய் குறித்துப் பதிவிட்டுள்ளார். அதில், “புதிதாகக் கட்சி ஆரம்பித்து மக்களிடம் ஓட்டு கேட்க வந்தால், மக்களுக்கு என்ன பிரச்னை இருக்கிறது, அதை உங்கள் கட்சி எப்படித் தீர்க்கும் என்ற திட்டங்களைச் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“இது சினிமா வசனம் பேசும் மேடை அல்ல”
விஜய்யின் பேச்சுகளை விமர்சித்த சேரன், “உங்களுக்கு ஸ்டாலின் வேண்டுமா அல்லது நான் வேண்டுமா என்று கேட்பது ஒரு நாட்டை ஆளத் தகுதியான பேச்சா? உங்களுக்கும் திமுகவிற்கும் என்னதான் பிரச்னை என்று மக்களுக்கும் தெரியவில்லை, உங்கள் ரசிகர்களுக்கும் புரியவில்லை. காரணத்தைச் சொல்லாமல் சினிமா வசனம் பேசினால் மக்கள் ஏன் உங்களுக்கு ஓட்டு போட வேண்டும்?” என்று ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
கொள்கை விளக்கம் எங்கே?
பல ஆண்டுகளாக மக்களுடன் நின்று போராடும் கட்சிகள் இருக்கும்போது, எந்த அடிப்படையில் நீங்கள் அவர்களை விட உயர்ந்தவர் என்று சேரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் குறிப்பிட்டிருப்பதாவது:
ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள பிரச்னைகளை அலசி ஆராயுங்கள்.
வீராவேசமாகப் பேச இது ‘அரட்டை அரங்கம்’ இல்லை, மக்கள் களம்.
மக்களின் பிரச்னையை உணராதவர் எங்களுக்குத் தேவையில்லை.
உங்கள் கவர்ச்சியை மட்டும் நம்பி அரசியல் செய்யாதீர்கள்
என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் சேரன்.
சேரனின் விமர்சனத்தால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம்
இயக்குநர் சேரனின் இந்த விமர்சனம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமா கவர்ச்சியைத் தாண்டி, தெளிவான கொள்கைகளும் திட்டங்களும் இருந்தால் மட்டுமே மக்களிடம் அங்கீகாரம் கிடைக்கும் என்பதைச் சேரன் சுட்டிக்காட்டியுள்ளார். 2026 தேர்தலில் விஜய்யின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
