Skip to content

விஜய்யின் வேட்புமனுவில் பல்வேறு குளறுபடிகள்; திருத்தம் கோரி தவெக சார்பில் முறையீடு-நாளை கடைசி நாள்!

சென்னை,ஏப்.05; வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீது வழக்குகள் எதுவும் இல்லை என்றும், திருச்சி கிழக்கு மனுவில் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இரண்டு மனுக்களிலும் வயது வெவ்வேறாக உள்ளது?

மேலும், இரண்டு மனுக்களிலும் அவரது வயது வெவ்வேறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

விவரங்கள் முரணாக இருப்பதால் மனு நிராகரிக்கப்படலாம் எனப் பேச்சுகள் எழுந்த நிலையில், தவெக தரப்பு நடவடிக்கையில் இறங்கியது.

திருத்தம் செய்யப்பட்ட மனுவை நேற்று (ஏப்ரல் 4, சனிக்கிழமை) பெரம்பூரில் தாக்கல் செய்தனர்.

வேட்புமனுவில் திருத்தம் செய்ய ஆவணங்கள் சமர்ப்பிப்பு

அந்தத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்து விஜய் வேட்புமனுவில் திருத்தம் செய்வதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தனர். ஏற்கனவே தாக்கல் செய்த வேட்புமனுவில் தன்னுடைய வயது 52 எனக் குறிப்பிட்டிருந்தார். திருச்சி கிழக்கில் தாக்கல் செய்த மனுவில் 51 எனக் குறிப்பிட்டிருந்தது. பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் 51 வயது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், விஜய் மீது கொளத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் பதியப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் குறித்த தகவல்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது.

அசையும் சொத்து மதிப்பு பற்றிய தகவலிலும் குளறுபடி

இரு பிரமாண பத்திரங்களிலும் தன்னிடம் ஐந்து சொகுசு கார்களும் ஒரு டிவிஎஸ் எக்ஸ் எல் மட்டுமே உள்ளதாக கூறியுள்ளார். ஆனால், தற்போது திருத்தம் செய்த மனுவில் தன்னிடம் ரூ.6 கோடி மதிப்புள்ள கேரவன் உள்ளதாக கூறியுள்ளார். அந்த வாகனத்தை ஏன் மறைத்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால், விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு ரூ.410 கோடியாக உயர்ந்துள்ளது. இது முன்பு குறிப்பிடப்பட்டிருந்த அசையும் சொத்து மதிப்பைவிட அதிகமாக உள்ளது.

தகவல் பிழைகளைச் சரி செய்ய சட்டப்படி இடமுண்டு

தகவல் பிழைகளைச் சரி செய்ய சட்டப்படி இடமுள்ளது என்பதால், அதனடிப்படையில், பெரம்பூர் தேர்தல் அதிகாரியிடம் திருத்தக் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்ரல் 6, 2026) வரை அவகாசம்

வேட்புமனு தாக்கல் செய்ய நாளை (ஏப்ரல் 6, திங்கள்) வரை கால அவகாசம் உள்ளதால், இந்தப் பிழைகளைச் சரிசெய்து புதிய உறுதிமொழி ஆவணத்தைத் தாக்கல் செய்ய தவெக திட்டமிட்டுள்ளது.

நேற்று (ஏப்ரல் 4, சனிக்கிழமை) புதுச்சேரியில் தேர்தல் பரப்புரையில் இருந்ததால் விஜய் நேரில் வர இயலவில்லை. அவருக்குப் பதிலாக, தவெக வழக்கறிஞர்கள் குழுவினர் பெரம்பூர் தேர்தல் பதிவு அதிகாரி புனித வள்ளியிடம் இதற்கான மனுவைச் சமர்ப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *