சென்னை,ஏப்.06; தமிழ்நாட்டில் ஜனநாயகத் திருவிழாவான சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய இன்று (ஏப்ரல் 6, 2026) கடைசி நாளாகும். அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சுயேச்சைகள் வரை அனைவரும் இன்று விறுவிறுப்பாக மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
234 தொகுதிகள்- ஏப்.23 வாக்குப்பதிவு-மே.4 வாக்கு எண்ணிக்கை
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து, கடந்த மாதம் (மார்ச்) 30ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
தேர்தல் களத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், ராமதாஸ்- சசிகலா அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.
மாநிலம் முழுவதும் அனல் பறக்கும் பரப்புரை
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
திமுக, அதிமுக, இடதுசாரிகள், மதிமுக, பாமக (அன்புமணி), அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தலைவர்களும், பிரபலங்களும் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
எடப்பாடி பழனிசாமி, பிரேமலதா இன்று வேட்புமனு தாக்கல்
திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோர் தீவிர பரப்புரை மேற்கொண்டுள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியிலும், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விருத்தாசலம் தொகுதியிலும் இன்று (ஏப்ரல் 6, திங்கள்) மனு தாக்கல் செய்கின்றனர்.
கடைசி நாளான இன்று பலர் மனுதாக்கல் செய்ய வாய்ப்பு
முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலர் ஏற்கனவே மனுதாக்கல் செய்துவிட்ட நிலையில், கடைசி நேரத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சியினரும் இன்று தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்யவிருக்கின்றனர்.
வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணிக்கு முடிவடைவதால், கடைசி நேரத்தில் பல வேட்பாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேட்பாளருடன் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?
தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலைனை நாளை (ஏப்ரல் 7) நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற வரும் 9ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஜனநாயக முறைப்படி மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தேர்தலில், வேட்புமனு தாக்கல் என்பது மிக முக்கியமான கட்டமாகும். இன்றுடன் இந்த நடைமுறை முடிவடைவதால், நாளை முதல் தேர்தல் பரப்புரை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர்களாகிய நாம் நமது கடமையைச் சரியாகச் செய்யத் தயாராவோம்.
