Skip to content

தமிழ்நாட்டில் 7,400 பேர் வேட்புமனு தாக்கல்; பரிசீலனை தொடங்கியது-பெரம்பூரில் விஜய்யின் மனு ஏற்பு-திமுக எதிர்ப்பு!

சென்னை,ஏப்.07; சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.

234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு வரும் 23ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் (மார்ச்) 28ஆம் தேதி தொடங்கியது.

அரசு விடுமுறை நாட்கள் போக, நேற்றுடன் சேர்த்து 4 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடந்துள்ளது. மொத்தமுள்ள 234 தொகுதிகளிலும் போட்டியிட, முதல் 3 நாட்களில் 3,430 வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

கடைசி நாளான நேற்று டோக்கன் விநியோகித்து வேட்புமனு தாக்கல்!

வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று (ஏப்ரல் 6, திங்கள்) கடைசி நாள் என்பதால் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் டோக்கன் விநியோகிக்கப்பட்டு, வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

முகூர்த்த நாள் என்பதால் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 7,400 வேட்புமனுக்கள்…!

நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4,000 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் 628 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 9ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

வேட்புமனுக்களை திரும்பப்பெற வரும் 9ஆம் தேதி கடைசிநாளாகும். அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தவெக தலைவர் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் குளறுபடிகள் இருப்பதாக தகவல் பரவிய நிலையில், அவை திருத்தம் செய்யப்பட்டு புதிய பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பெரம்,பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு; திமுக, சுயேச்சைகள் எதிர்ப்பு

இவ்விரண்டு தொகுதிகளிலும் விஜய் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டதாக சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பெரம்பூரில் விஜய்யின் மனு ஏற்கப்பட்டதற்கு திமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி, நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா உள்ளிட்டோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *