சென்னை,ஏப்.07; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரங்களில் அவர்களது சொத்து மதிப்பு பற்றிய விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் பணக்கார வேட்பாளர் யார் என்ற விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி லால்குடி தொகுதியில் போட்டியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் தான் பணக்கார வேட்பாளர் என்று தேர்தல் ஆணைய தரவுகள் தெரிவிக்கின்றன. அவருடைய சொத்து மதிப்பு ரூ.1,048 கோடியாகும். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் அரசியல் கட்சிகளை மட்டுமன்றி, சாமானியர்களையும் புருவம் உயர்த்த வைத்திருக்கின்றன.
லீமா ரோஸ் யார்? பின்னணி என்ன?
லாட்டரி தொழிலில் கொடிகட்டிப்பறந்த சாண்டியாகோ மார்ட்டினின் மனைவியான லீமா ரோஸ், சில மாதங்களுக்கு முன்னர் வரை இந்திய ஜனநாயக கட்சியில் (IJK) இணைப் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். ஆனால், அந்தக் கட்சியில் 15 ஆண்டுகளாகப் பணியாற்றியும் எந்தவித அங்கீகாரமும் இல்லை எனக்கூறி, சமீபத்தில்தான் அதிமுகவில் சேர்ந்தார்.
தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் மாமியாரான லீமா ரோஸ், அதிமுகவில் இணைந்த சில நாட்களிலேயே அக்கட்சியின் லால்குடி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சாண்டியாகோ மார்ட்டின்-லீமா ரோஸ் தம்பதியின் மகனான ஜோஸ் டெய்சன் மார்ட்டின் புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி என்ற பெயரில் ஒரு கட்சியை நடத்தி வருகிறார்.
லால்குடியில் லீமா ரோஸ் போட்டி; தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு
லீமா ரோஸ் சமர்ப்பித்த சொத்து விவரங்களின்படி, அவரது குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு பல ஆயிரம் கோடிகளைத் தாண்டுகிறது:
லீமா ரோஸின் சொத்துகள்: அவருக்குச் சொந்தமாக ரூ.139.62 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளும், ரூ.909.94 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளும் உள்ளன.
மொத்த குடும்ப சொத்து: இவரது கணவர் சாண்டியாகோ மார்ட்டினின் சொத்து மதிப்பு மட்டும் சுமார் ரூ.4,149 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது மகன் ஜோஸ் டெய்சன் மார்ட்டினுக்கு ரூ.664 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன.
ஆண்டு வருமானம்: கடந்த 2024-25 நிதியாண்டில் லீமா ரோஸ் ரூ.9.82 கோடி வருமானமாக ஈட்டியுள்ளார்.
தேர்தல் களம் எப்படி உள்ளது?
தமிழகத்தில் ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. அதேசமயம் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) முதல் முறையாகத் தேர்தலைச் சந்திப்பதால், இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது.
சவாலாகத் திகழும் லீமா ரோஸின் சொத்து மதிப்பு!
தேர்தல் களத்தில் பண பலம் எப்போதும் ஒரு முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. சுமார் 1,000 கோடிக்கும் அதிகமான தனிப்பட்ட தங்களுடன் லீமா ரோஸ் களம் காண்பது மற்ற வேட்பாளர்களிடையே பெரும் சவாலாகக் கருதப்படுகிறது. மே 4-ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகள், மக்களின் ஆதரவு யாருக்கு என்பதைத் தீர்மானிக்கும்.
