சென்னை,ஏப்.07; சென்னை மாவட்டத்தின் தென்பகுதியில் அமைந்திருக்கும் தொகுதி தி.நகர் என்றழைக்கப்படும் தியாகதராய நகர் தொகுதி. தலைநகரின் இதயப் பகுதியாகவும் முக்கியமான வணிக மையமாகவும் திகழ்கிறது தியாகராய நகர்.
கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், அசோக் நகர், கே.கே.நகர், எம்ஜிஆர் நகர், வட பழனி ஆகிய முக்கிய பகுதிகள் இத்தொகுதிக்குள் அடங்கியுள்ளன. முதன்மை வணிக மையமாக மட்டுமின்றி, மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்பு பகுதியாகவும் திகழ்கிறது.
சென்னையின் அடையாளமாகத் திகழும் பகுதிகளை உள்ளடக்கியது
பிரதானமான கடைகள், ரங்கநாதன் தெரு, சிவா-விஷ்ணு கோயில், பனகல் பூங்கா, பாண்டி பஜார், வெங்கடநாராயணா சாலை போன்றவை தியாகராய நகர் தொகுதியின் முக்கிய அடையாளங்களாகும்.
தியாகராய நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நாடார், முதலியார், நாயுடு, வன்னியர், பிராமணர், பட்டியலினத்தவர் என அனைத்து சமூக மக்களும் வசிக்கின்றன
எத்தனை பாலம் கட்டினாலும் தீராத போக்குவரத்து நெரிசல்!
எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் தியாகராய நகரின் பிரதான பிரச்னையாக இருப்பது போக்குவரத்து நெரிசல்தான். எத்தனை பாலங்கள் கட்டப்பட்டாலும் போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண முடியவில்லை.
பேருந்துகள் மற்றும் மின்சார ரயில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லக்கூடிய இப்பகுதியில் தேவையான கழிப்பறை வசதிகள் இல்லை என்பது நீண்டகாலமாக கூறப்படும் குற்றச்சாட்டாகும்.
வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதியில்லை
கடைகளுக்கு வருவோர் வாகனங்களை நிறுத்த போதுமான இடவசதி இல்லாதது, மழைக்காலத்தில் சுரங்கப்பாதைகளில் குளம்போல் தண்ணீர் தேங்குவது, தினமும் டன் கணக்கில் தேங்கும் குப்பைகள், ஆயிரக்கணக்கான வாகனங்களின் இயக்கத்தால் உருவாகும் காற்று மாசுபாடு என இப்பகுதி மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம்.
2021-ல் சொற்ப வாக்குகளில் வென்ற திமுக வேட்பாளர்
கடந்த 1957 தொடங்கி இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில் அதிகபட்சமாக திமுக 6 முறையும், அதிமுக 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2021 தேர்தலில் திமுக வேட்பாளராக மறைந்த ஜெ.அன்பழகனின் சகோதரர் ஜெ.கருணாநிதி வெற்றிபெற்று எம்எல்ஏ ஆனார்.
அத்தேர்தலில் அவர் 56 ஆயிரத்து 35 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தியாகராய நகர் சத்யா 55 ஆயிரத்து 898 வாக்குகளும் பெற்றனர். 137 வாக்குகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று ஜெ.கருணாநிதி வெற்றி பெற்றார்.
தற்போதைய திமுக எம்எல்ஏ-வுக்கு சீட் மறுப்பு
தற்போது அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு. ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகனுக்கு போட்டியிட சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் கடந்த தேர்தலில் தோல்வியடைந்த தியாகராய நகர் சத்தியா, நாம் தமிழர் கட்சி சார்பில் அனுஷா விஜய குமார், தவெக சார்பில் என்.ஆனந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
இத்தொகுதியில் திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் சமபலத்துடன் இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். கடந்த முறை நூலிழையில் வெற்றிவாய்ப்பை இழந்த சத்யா, கூட்டணி கட்சிகளின் பலத்தால் இந்தமுறை வெற்றி பெற்று விடலாம் என கணக்குப் போடுகிறார்.
புதிய வரவான தவெக-வினால் திமுக, அதிமுகவுக்கு சிக்கல்
அதேநேரம் புதிய வரவான தவெக வேட்பாளர், எந்தக் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பார் என்பதைப் பொறுத்தே வெற்றி தீர்மானிக்கப்படும் என்று தெரிகிறது. எனவே இந்த முறையும் திமுக – அதிமுக இடையே போட்டி கடுமையாக இருக்கும்.
ஆளும் திமுக மீது ஆங்காங்கே அதிருப்தி நிலவுவது அக்கட்சிக்கு பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
யார் வென்றாலும் வாக்கு வித்தியாசம் குறைவாகத்தான் இருக்கும்?
எந்தக்கட்சி வென்றாலும் வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. வெற்றியை தம் வசமாக்க இரு கட்சியினரும் அனல்பறக்க களப்பணியாற்றி வருகின்றனர்.
தியாகராய நகர் தொகுதியில் சுமார் 1,55,000 வாக்காளர்கள் உள்ளனர். பிற தொகுதிகளைப் போன்றே இங்கும் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்கள் 5,000-க்கும் அதிகமாக உள்ளனர்.
