Skip to content

மம்தா பானர்ஜியின் குற்றச்சாட்டுக்கு ஜோதிமணி எம்பி கண்டனம்; முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக குரல்!

சென்னை,ஏப்.07: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மம்தாவின் இந்தப் பேச்சுக்கு கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மம்தா பானர்ஜியின் சர்ச்சை பேச்சு

மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட முதலமைச்சர் மம்தா பானர்ஜி, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுடன் ரகசிய உடன்பாடு வைத்துள்ளனர்” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டிற்குப் பார்வையாளர்களாக அனுப்பியதன் பின்னணியில் பாஜகவின் அரசியல் சூழ்ச்சி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ஸ்டாலினுக்கு ஆதரவாக ஜோதிமணி எம்.பி.யின் பதிலடி

மம்தாவின் இந்தக் கருத்தை ‘அபத்தமானது’ என்று விமர்சித்துள்ள கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளப் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சமரசமற்ற போராட்டம்: “இந்தியாவின் மூத்த தலைவரான மம்தா பானர்ஜி, இப்படிப் பொறுப்பில்லாமல் பேசுவது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரஸும் பாஜகவுக்கு எதிராக ஒரு யுத்தமே நடத்திக் கொண்டிருக்கின்றன. எமது மொழி, இனம் மற்றும் பண்பாட்டைக் காக்க முதலமைச்சர் ஸ்டாலின் பாஜகவோடு சமரசமற்றுப் போராடி வருகிறார்”

திரிணமூல் காங்கிரஸின் இரட்டை நிலை: “நாடாளுமன்றத்தில் பாஜகவை எதிர்க்கும் போது திமுக எப்போதும் எங்களுடன் நிற்கிறது; ஆனால், மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செய்வதில்லை. ஆனாலும், நாங்கள் உங்கள் மீது அவதூறு பரப்பியது கிடையாது”

வெற்றிக்கு வழி இதுவல்ல: “நீங்கள் கடந்த 15 ஆண்டுகளில் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேளுங்கள்; அதுதான் உங்களுக்கு வெற்றியைத் தரும்; கூட்டணிக் கட்சிகளைச் சிறுமைப்படுத்துவதால் எதையும் சாதிக்க முடியாது” என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தியின் தலைமை

ராகுல் காந்தி அச்சமின்றி மோடி அரசுக்கு எதிராகப் போராடி வருவதாகவும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலிலும் சரி, தேசிய அளவிலும் சரி பாஜகவைத் தோற்கடிப்பதே தங்களது இலக்கு என்றும் ஜோதிமணி தெளிவுபடுத்தியுள்ளார். “எங்கள் தலைவரின் போராட்டத்தை நீங்கள் பலவீனப்படுத்த நினைக்காதீர்கள்; இந்த தேசம் உங்களை மன்னிக்காது” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே மோதல்; அரசியல் களத்தில் விவாதம்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளுக்குள்ளேயே நிலவும் இந்த மோதல் அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், பாஜகவின் ஊடுருவலைத் தடுக்கவும் திமுக-காங்கிரஸ் கூட்டணி உறுதியாக இருப்பதாக ஜோதிமணி தெரிவித்துள்ள கருத்தை அரசியல் நோக்கர்கள் உற்றுநோக்கி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *