திருவனந்தபுரம்.ஏப்.08; கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலையொட்டி அனல் பறக்க நடைபெற்று வந்த தேர்தல் பரப்புரை நேற்றுடன் (ஏப்ரல் 7, புதன்) ஓய்ந்தது. இந்த மூன்று மாநிலங்களிலும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
அசாம்: கடைசிநாள் பேரணிகளால் அதிர்ந்த களம்
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பரப்புரையின் கடைசி நாளான நேற்று, பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசினார்.
மறுபுறம், காங்கிரஸ் மூத்த தலைவர் குமாரி செல்ஜா, பாஜக பிரிவினை அரசியலை முன்னெடுப்பதாகக் குற்றஞ்சாட்டினார். அசோம் கண பரிஷத் மற்றும் இதர பிராந்தியக் கட்சிகளும் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட மும்முரமாகப் பணியாற்றின.
கேரளா: நேற்று மாலை முதல் அமைதி காலம் தொடங்கியது!
கேரளாவில் 140 தொகுதிகளுக்கான பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. ஆளுங்கட்சியான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு முன்னணி மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
நட்சத்திரப் பேச்சாளர்களால் களைகட்டியது புதுச்சேரி
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தேர்தல் களத்தில் அனல் பறந்தது. பரப்புரையின் கடைசி நாளான நேற்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இனி மக்கள் கையில் தீர்ப்பு
பல வாரங்களாகத் தொடர்ந்த அனல் பறக்கும் பிரசாரம் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில், அனைத்துத் தரப்பு கவனமும் நாளை (ஏப்ரல் 9, வியாழன்) நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவின் மீது குவிந்துள்ளது. தேர்தல் ஆணையம் அமைதியான முறையில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
