டெல்லி,ஏப்.09; ஆம் ஆத்மி கட்சியின் (AAP) மாநிலங்களவை எம்பி ராகவ் சதா மற்றும் அக்கட்சியின் பிற தலைவர்களுக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், ராகவ் சதாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“சுவாரஸ்யமான யோசனை” – ராகவ் சதா சொன்னது என்ன?
ரிஹான் (Rihan) என்ற பயனர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை (Reel) பதிவிட்டிருந்தார். அதில், “ராகவ் சதா இப்போது தனிக் கட்சி தொடங்க வேண்டும், அதற்கு ‘ஜென்-இசட் பார்ட்டி’ (Gen-Z Party) என்று பெயரிடலாம். அவர் வேறு கட்சியில் இணைந்தால் இப்போது அவருக்கு கிடைக்கும் ஆதரவு கிடைக்காமல் போகலாம். ஆனால், சொந்தக் கட்சி தொடங்கினால் இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்று எளிதாக வெற்றி பெறலாம்” என்று கூறியிருந்தார்.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த ராகவ் சதா, அதனை “சுவாரஸ்யமான யோசனை” (Interesting thought) என்று குறிப்பிட்டுள்ளார். இது அவர் ஆம் ஆத்மியில் இருந்து விலகிப் புதிய கட்சி தொடங்கப் போகிறாரா என்ற ஊகத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஆம் ஆத்மி – ராகவ் சதா இடையே என்ன பிரச்னை?
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவியிலிருந்து ராகவ் சதாவை ஆம் ஆத்மி கட்சி நீக்கியது. அவருக்குப் பதிலாக அசோக் குமார் மிட்டல் நியமிக்கப்பட்டார். மேலும், நாடாளுமன்றத்தில் கட்சியின் சார்பில் பேசுவதற்கும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டது.
இதற்கான காரணங்களாக ஆம் ஆத்மி தரப்பு கூறுவது:
ராகவ் சதா பாஜக மீது மென்மையான போக்கைக் கடைப்பிடிக்கிறார்.
முக்கியமான அரசியல் பிரச்னைகளைப் பேசாமல், விமான நிலையங்களில் சமோசா விலை உயர்வு போன்ற பிரச்னைகளைப் பேசி நேரத்தை வீணடிக்கிறார்.
தேர்தல் ஆணையர் மீதான பதவி நீக்கத் தீர்மானத்தில் கையெழுத்திட மறுத்தார்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோது கட்சியின் போராட்டங்களில் அவர் கலந்துகொள்ளவில்லை.
அதிஷி போன்ற மூத்த தலைவர்கள் ராகவ் சதாவைப் பார்த்து, “பாஜகவைக் கண்டு நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? பிரதமர் மோடியை ஏன் கேள்வி கேட்கத் தயங்குகிறீர்கள்?” என்று பகிரங்கமாகவே கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராகவ் சதாவின் பதிலடி
தனக்கு எதிரான புகார்களுக்குப் பதிலளித்த ராகவ் சதா, “நான் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகளை எழுப்பியதற்காகக் கட்சி என்னை ஒடுக்கப் பார்க்கிறது” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
சமீபத்தில் அவர் ‘The 48 Laws of Power’ என்ற புத்தகத்தைப் படிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “தலைவரை விட ஒருபோதும் அதிகமாக ஜொலிக்காதே (Never outshine the master)” என்ற அதன் முதல் அத்தியாயத்தைக் குறிப்பிட்டிருந்தார். இது அவர் கெஜ்ரிவாலை விடப் பிரபலமடைந்ததால் ஓரங்கட்டப்படுகிறார் என்பதை மறைமுகமாக உணர்த்துவதாகக் கருதப்படுகிறது.
ஆம் ஆத்மி -ராகவ் சதா மோதல் முற்றுகிறது
ராகவ் சதா இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை என்றாலும், அவர் பகிர்ந்து வரும் பதிவுகள் அனைத்தும் ஆம் ஆத்மி உடனான அவரது உறவு முடிவுக்கு வந்துவிட்டதையே காட்டுகின்றன. இளைஞர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள ராகவ் சதா, புதிய கட்சி தொடங்கினால் அது பஞ்சாப் மற்றும் டெல்லி அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என நம்பப்படுகிறது.
