Skip to content

காரைக்குடியில் விஜய் பேசாமல் சென்றதால் தவெகவினர் ஏமாற்றம்; நேரம் கடந்துவிட்டதால் அனுமதி மறுத்த போலீஸ்!

சென்னை,ஏப்.10; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் மாநிலம் முழுவதும் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று (ஏப்ரல் 10, வெள்ளி) நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில், விஜய் பேசாமல் சென்றது அவரது தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாமதமான வருகையும் நேரக் கட்டுப்பாடும்

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்த விஜய், அங்கிருந்து கார் மூலம் காரைக்குடிக்கு சாலைப் பயணமாக (Road Show) புறப்பட்டார். மதுரையில் இருந்து காரைக்குடி செல்ல வழக்கமாக ஒன்றரை மணி நேரமே ஆகும். ஆனால், வழியெங்கும் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அவருக்கு வரவேற்பு அளித்ததால், அவரது பயணம் தாமதமானது.

இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்ததால் விபத்து-2 பேர் காயம்

இதுதவிர பல்வேறு பகுதிகளிலிருந்து விஜய்யின் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது வாகனத்தைப் பின் தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் வந்தனர். அவர்களில் இரண்டு பேர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தனர். இதன் காரணமாகவும் விஜய் காரைக்குடி வந்துசேர்வது தாமதமானது.

காரைக்குடி கண்ணதாசன் நகர் பகுதியில் மதியம் 12:30 முதல் 2:30 மணி வரை மட்டுமே பரப்புரை செய்ய காவல்துறையினர் அனுமதி அளித்திருந்தனர். ஆனால், மக்கள் கூட்டத்தின் காரணமாக விஜய் அந்த இடத்திற்கு வந்து சேர அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்துவிட்டது.

அனுமதி மறுப்பும் மௌனப் பரப்புரையும்!

அனுமதிக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டதால், விஜய் மைக்கில் பேசுவதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மேடையில் பேச முடியாத சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து, விஜய் தனது பரப்புரை வேனில் இருந்தவாறே தவெக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். கையில் கட்சியின் சின்னமான ‘விசில்’ (Whistle) சின்னத்தை ஏந்தியபடி, மக்களைப் பார்த்து கையசைத்து வாக்கு சேகரித்தார். இருப்பினும், அவர் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

தொண்டர்கள் ஏமாற்றம் – சீமான் தொகுதி பரபரப்பு

காரைக்குடி தொகுதி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதி என்பதால், அங்கு விஜய் என்ன பேசுவார்? சீமான் குறித்து ஏதேனும் கருத்து தெரிவிப்பாரா? என்ற பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. காலை முதலே கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், விஜய் பேசாமல் சென்றதால் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நேரக் கட்டுப்பாடு காரணமாக விஜய்யால் காரைக்குடியில் பேச முடியாமல் போனது தவெக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் நாட்களில் இது போன்ற நேர மேலாண்மை சிக்கல்களைத் தவிர்க்க கட்சித் தலைமை திட்டமிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ, விஜய்யின் இந்த ‘மௌனப் பரப்புரை’ காரைக்குடியில் பேசுபொருளாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *