டெல்லி,ஏப்.11; தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வாக, நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதால், அரசியல் வட்டாரங்களில் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.
மனுவின் பின்னணி மற்றும் கோரிக்கைகள்
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் பணம், வாக்காளர்களுக்கு இலவசங்களை அறிவித்து வாக்குகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன-இது அரசியல் சாசன விதிகளுக்கும் மட்டுமல்ல தேர்தல் நடத்தை விதிகளுக்கும் எதிரானது என்று அவரது மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை நிறுத்தி வைக்க உத்தரவிட வேண்டும் -இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கே.கே.ரமேஷின் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 13ஆம் தேதி அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரணை?
வரும் திங்கள்கிழமை அவசர வழக்காக பட்டியலிடப்பட்டு உச்ச நீதிமன்றம் இதனை விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்துள்ள கே.கே.ரமேஷ் ஒரு சமூக ஆர்வலரும், வழக்கறிஞருமாவார்.
வழக்கு தொடுத்துள்ள கே.கே.ரமேஷ் யார் தெரியுமா?
சமீபத்தில்,திருப்பரங்குன்றம் மலைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரி கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை ரூ.50,000 அபாரதம் விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அப்போது கே.கே. ரமேஷை கடிந்துகொண்ட நீதிபதிகள், நாட்டில் திருப்பரங்குன்றத்தை தவிர வேறு பிரச்னையே இல்லையா? என்று கூறியது. திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக எத்தனை வழக்குகள் தான் தாக்கல் செய்வீர்கள்? நீதிமன்றத்துக்கு வேறு வேலையில்லையா? என்றும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அதே கே.கே.ரமேஷ் தான், இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
