சென்னை,ஏப்.17; தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அன்று பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகளின் கடைசிநேர பரப்புரை தீவிரமடைந்துள்ளது. திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் நடிகர் விஜய், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பாமக தலைவர் அன்புமணி, டிடிவி தினகரன், பாமக நிறுவனர் ராமதாஸ், வி.கே. சசிகலா உள்ளிட்ட பலரும் சூறாவளி பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் மேலிடத் தலைவர்கள் யாரும் இதுவரை வரவில்லை
அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பரப்புரை செய்தனர்.
ஆனால், திமுக தலைமையிலான கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸின் மேலிடத் தலைவர்கள் யாரும் இதுவரை தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ளவில்லை.
குறிப்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வரவில்லை .
தவெக-வுடன் கூட்டணி அமைக்க விரும்பிய ராகுல்!
ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தவெக-வுடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும், அவரது எண்ணத்திற்கு மாறாக திமுக கூட்டணியில் தொடர நேர்ந்ததாகவும், இதனால் அவர் தமி்ழ்நாட்டில் தேர்தல் பரப்புரைக்காக வரமாட்டார் என்று பரவலான கருத்து அரசியல் வட்டாரங்களில் பரவியது.
ராகுல் நாளை மற்றும் 20ஆம் தேதி பரப்புரைக்காக வருகை
இதுபோன்ற சூழலில், ராகுல் காந்தியின் காங்கிரஸ் வட்டாரம் நேற்று (ஏப்ரல் 16, 2026) உறுதி செய்துள்ளது.
அதன்படி, நாளை (ஏப்ரல் 18) மற்றும் (ஏப்ரல் 20) ஆகிய தேதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். நாளைய தினம் பொன்னேரி, சோளிங்கர், துறையூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் ராகுல் வாக்கு சேகரிக்கிறார்.
20ஆம் தேதி நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம், குளச்சல் தொகுதிகளில் அவர் திமுக-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.
நாங்குநேரியில் ராகுல், ஸ்டாலின் ஒன்றாக பரப்புரை?
இதுவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மேடையேறாத ராகுல் காந்தி நாங்குநேரி தொகுதியில் அவருடன் இணைந்து பரப்புரை செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் பரப்புரைக்கு ராகுல் காந்தி வருவது உறுதியாகிவிட்டதால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அவரது பரப்புரை கூட்டணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
