சென்னை, ஏப்.19; சென்னையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி வாக்களிக்கவும் தேர்தல் ஆணையம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சென்னையில் அதிக வாக்காளர்களைக் கொண்ட 5 முக்கிய அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களுக்குள்ளேயே (Apartmrnt Complexes) வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடி – பின்னணி
பொதுவாக நகர்ப்புறங்களில், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை அல்லது போக்குவரத்து நெரிசல் காரணமாகத் தவிர்க்கின்றனர். இதனைச் சரிசெய்ய, வாக்காளர் எண்ணிக்கை அதிகமாக உள்ள குடியிருப்பு வளாகங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே வாக்குப்பதிவு மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி மற்றும் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 5 முக்கிய இடங்கள்
அதன்படி ஒரே இடத்தில் அதிக வாக்காளர்கள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளான டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதி, தண்டையார்பேட்டையில் உள்ள பிரின்ஸ் வில்லேஜ் அடுக்குமாடி குடியிருப்பு, விருகம்பாக்கம் தொகுதி, கோடம்பாக்கம், கோயம்பேடு சௌத் ஏசியன் கேம்ஸ் கோ ஆர்டினேட் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதி, வேளச்சேரி தொகுதி, வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள CDS ரியல் பாம் கார்டன் குடியிருப்பு என மொத்தம் ஐந்து அடுக்குமாடி குடியிருப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இங்கு வசிக்கும் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் வரும் தேர்தலில் தங்கள் வீட்டை விட்டு வெளியே நீண்ட தூரம் செல்லாமல், வளாகத்திற்குள்ளேயே பாதுகாப்பாக வாக்களிக்க முடியும்.
வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
இந்த 5 அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் வாக்காளர்களுக்கு 100 விழுக்காடு வாக்களிப்பதன் அவசியம் குறித்து நேற்று (ஏப்ரல் 18, 2026) விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்தத் திட்டத்தின் நன்மைகள்
வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு: வாக்காளர்கள் தங்கள் இடத்திலேயே வாக்களிக்கும் வசதி இருப்பதால், வாக்குப்பதிவு சதவீதம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி: லிப்ட் வசதி கொண்ட அடுக்குமாடி வளாகங்களில் வாக்குச்சாவடி அமைவதால், முதியோர்கள் சிரமமின்றி வாக்களிக்கலாம்.
நெரிசலை தவிர்க்கலாம்: பொது இடங்களில் உள்ள வாக்குச்சாவடிகளில் ஏற்படும் கூட்டம் இதன் மூலம் குறையும்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
குடியிருப்பு வளாகங்களுக்குள் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டாலும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவப் படை பாதுகாப்பு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் வெளிநபர்கள் அத்துமீறாமல் இருக்கத் தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சோதனை முயற்சியால் வாக்குப்பதிவு அதிகரிக்கும் என நம்பிக்கை
ஜனநாயகக் கடமையை அனைவரும் நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள இந்த முயற்சி வரவேற்புக்குரியது. சென்னையில் சோதனை முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், வரும் காலங்களில் பிற பெருநகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்புள்ளது.
