Skip to content

பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்து ஓராண்டு நிறைவு; சுற்றுலா வரைபடத்திலிருந்து மறைகிறதா இந்த சொர்க்க பூமி?

பஹல்காம்,ஏப்.22; காஷ்மீரின் அழகிய புல்வெளிகள் மற்றும் அமைதியான நதிகளுக்குப் பெயர்பெற்ற பஹல்காம், இன்று ஒருவிதமான மௌனத்தில் மூழ்கியுள்ளது. சரியாக ஓராண்டிற்கு முன்பு, இதே நாளன்று (ஏப்ரல் 22, 2025) நிகழ்ந்த அந்த கோரமான பயங்கரவாதத் தாக்குதல், இன்றும் அந்தப் பகுதியின் சுற்றுலாத்துறையை மீளமுடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மறக்க முடியாத ரத்தக் கறைகள்

பஹல்காமின் லிடர் நதிக்கரையில் அமைந்துள்ள “I Love Pahalgam” என்ற செல்ஃபி பாயிண்டிற்கு அருகே இன்று ஒரு புதிய நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது. கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட அந்த 26 பெயர்கள், கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று இதே போன்ற ஒரு நாளில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான சுற்றுலாப் பயணிகளின் நினைவைச் சுமந்து நிற்கின்றன. பைசரன் (Baisaran) புல்வெளியில் நடந்த அந்தத் தாக்குதல், காஷ்மீர் சுற்றுலாத்துறைக்கு ஒரு பேரிடியாக அமைந்தது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பெரும் சரிவு

அரசுத் தரவுகளின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் சுமார் 30 லட்சமாக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2025 இல் 12 லட்சத்திற்கும் குறைவாகச் சரிந்தது. காஷ்மீரின் பிற பகுதிகள் மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்பி வரும் வேளையில், பஹல்காம் மட்டும் இன்னும் அந்த அச்சத்திலிருந்து விடுபடவில்லை.

“சுற்றுலாப் பயணிகள் இப்போது சோன்மார்க் மற்றும் குல்மார்க் போன்ற இடங்களையே விரும்புகிறார்கள். பஹல்காம் செல்வதற்கு அவர்களுக்குள் ஒருவித பயம் இருக்கிறது” என்று ஸ்ரீநகரைச் சேர்ந்த ஒரு வாகன ஓட்டுநர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூர்வாசிகள்

பஹல்காமில் குதிரை சவாரி செய்பவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். தாக்குதலின் போது பல சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றிய குதிரை ஓட்டுநர்கள் சங்கத்தினர், “ஏப்ரல் 22-க்கு முன்னால் ஒரு பஹல்காம் இருந்தது, அதற்குப் பின் இப்போது இருப்பது முற்றிலும் வேறொரு பஹல்காம்” எனத் தங்கள் கவலையைப் பதிவு செய்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளின் மனதில் ஏற்பட்ட ஆறாத வடு

அரசு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தாலும், சுற்றுலாப் பயணிகளின் மனதில் ஏற்பட்ட வடு இன்னும் ஆறவில்லை. பஹல்காம் மீண்டும் தனது பழைய அழகையும், கலகலப்பையும் பெற வேண்டுமெனில், பாதுகாப்பு உணர்வை மீண்டும் ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயமாகும். இயற்கை எழில் கொஞ்சும் இந்த பூமி, மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக மாறும் என நம்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *