நாம் தமிழர் கட்சிக்கு ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வந்த வாக்கு விழுக்காடு, இம்முறை பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது. வாக்கு சதவீதமும் 8லிருந்து 4ஆக சரிந்துவிட்டது.
தினத்தந்தி நாளேட்டின் நிறுவனரும், தமிழர் தந்தை என்றழைக்கப்படுபவருமான சி.பா.ஆதித்தனாரால் 1958-ல் தொடங்கப்பட்ட கட்சியின் பெயர் நாம் தமிழர் கட்சி. இந்தப் பெயரை தத்தெடுத்துக் கொண்ட சீமான், 2010ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் அதனை புதிய அமைப்பாகத் தொடங்கினார்.
தமிழ்த் தேசியம் பேசி வளர்ந்த சீமான்
இது தமிழ்த் தேசியம், ஈழப் போராட்ட ஆதரவு ஆகிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு தமிழ் தேசியவாத அரசியல் கட்சியாக அறியப்படுகிறது.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் முதன்முறையாக களம்கண்ட நாம் தமிழர் கட்சி 4,58,104 வாக்குகளைப் பெற்றது. இது 1.1 விழுக்காடு வாக்குகளும். இத்தேர்தலில் கடலூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான், 12,497 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார்.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு விழுக்காட்டை அதிகரித்த நாதக
பின்னர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் 3.89 விழுக்காடு வாக்குகளை பெற்றது.
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 30,37,139 வாக்குகள் கிடைத்தன. இதில் அக்கட்சியின் வாக்கு விகிதம் 6.72 சதவீதமாக அதிகரித்தது. அந்தத் தேர்தலில் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்ட சீமான் 48,597 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடம்பிடித்தார்.
2024 பொதுத் தேர்தலுக்கு பின் நாதகவுக்கு மாநில கட்சி அந்தஸ்து
இதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் கட்சி 43,67,404 வாக்குகளைப் பெற்றது. இதன் மூலம் அக்கட்சியின் வாக்கு விகிதம் 8 விழுக்காடாக அதிகரித்ததுடன், நாம் தமிழர் கட்சிக்கும் மாநில அந்தஸ்தைப் பெற்றுத்தந்தது.
ஆண், பெண்களுக்கு சரிபாதி வாய்ப்பளிப்பது வழக்கம்
ஒவ்வொரு தேர்தலுக்கும் மற்ற கட்சிகளைவிட வெகு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் சீமான், 234 தொகுதிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரிபாதி வாய்ப்பளிப்பதை பின்பற்றி வருகிறார்.
இம்முறையும் அதே பாணியிலேயே வேட்பாளர்களை அறிவித்தார். காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட சீமான், 17,926 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார். இது காரைக்குடி தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் துரை மாணிக்கம் பெற்ற வாக்குகளைவிட சுமார் 6,000 வாக்குகள் குறைவாகும்.
2026 தேர்தலில் வாக்கு விகிதம் 4% ஆக சரிந்தது
வாக்கு சதவீதத்தைப் பொருத்தவரையில், இத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்குகள் 44 லட்சத்திலிருந்து 19 லட்சமாக குறைந்துள்ளது. அதாவது சுமார் 25 லட்சம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி இழந்துள்ளது. வாக்கு விழுக்காடும் 8லிருந்து 4ஆக குறைந்துவிட்டது.
