சென்னை,மே.06; நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.
பெரும்பான்மை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
பெரும்பான்மை என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் , மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளைவிட ஒன்று கூடுதலாக இருக்க வேண்டும். அதாவது, 118 தொகுதிகள் வேண்டும். தவெக தலைவர் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பதால், அதில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது.
மேலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த தவெக.வில் இருந்து ஒருவர் தற்காலிக சபாநாயகராக இருக்க நேரிடும் என்பதால், அவரால் ஓட்டுப்போட முடியாது. எனவே, தவெக ஆட்சியமைக்க இன்னும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த வகையில், தவெக.வுக்கு 4 வழிகள் இருக்கின்றன.
தவெக ஆட்சியமைக்க என்னென்ன வழிகள் உள்ளன?
முதல் வழியாக, தவெக-வுக்கு காங்கிரஸ் (5 தொகுதிகள்), பாமக (5), இந்திய கம்யூனிஸ்ட் அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளில் ஒன்று (தலா 2 தொகுதிகள்) ஆதரவளிக்க வேண்டும்.
2ஆவது வழியாக, தவெக-வுக்கு பாமக (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2) ஆதரவளிக்க வேண்டும்.
3ஆவது வழியாக, தவெக-வுக்கு காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2) ஆதரவளிக்க வேண்டும்.
தவெக அரசுக்கு அதிமுக ஆதரவளிக்க வாய்ப்பு உள்ளதா?
4-வது வழியாக, தவெக-வுக்கு அதிமுக (45) ஆதரவளிக்க வேண்டும். ஆனால், அதிமுக ஆதரவு தெரிவிக்க வேண்டுமெனில், துணை முதலமைச்சர், முக்கிய துறைகளின் அமைச்சர் பதவிகளை குறிவைக்கும். இவ்வாறு 4 வழிகள் வழிகள் இருந்தாலும், தவெக தலைவர் விஜய் எடுக்கப்போவது தான் இறுதி முடிவாக இருக்கும்.
