வாஷிங்டன், டிச.24; அமெரிக்காவில் பணிபுரிய விரும்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா முறையில், உள்நாட்டு பாதுகாப்புத் துறை (DHS) ஒரு அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதுவரை நடைமுறையில் இருந்த ‘ரேண்டம் லாட்டரி’ (Random Lottery) எனும் சமவாய்ப்பு குலுக்கல் முறை நீக்கப்பட்டு, இனி அதிக சம்பளம் மற்றும் அதிகத் திறன் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் ‘வெயிட்டட் செலக்சன்’ (Weighted Selection) முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
H-1B விசா முறையில் ஏன் மாற்றம்
தற்போதைய குலுக்கல் முறையில், தகுதியுள்ள அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த முறையைப் பயன்படுத்தி சில நிறுவனங்கள் குறைந்த ஊதியத்திற்கு வெளிநாட்டு ஊழியர்களைத் தற்காலிகமாகப் பணியமர்த்துவதாகவும், இதனால் அமெரிக்க ஊழியர்களின் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியம் பாதிக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தவிர்க்கவே, அதிகத் திறன் கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த புதிய விதி கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய ‘வெயிட்டட் செலக்சன்’ முறை எப்படிச் செயல்படும்?
புதிய விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெறும் ஊதியத்தின் அடிப்படையில் நான்கு நிலைகளாகப் (Levels) பிரிக்கப்படுவார்கள்:
நிலை 4 (Level IV): மிக உயர்ந்த ஊதியம் பெறுபவர்கள் – இவர்களது பெயர் குலுக்கல் தொகுப்பில் 4 முறை சேர்க்கப்படும்.
நிலை 3 (Level III): அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் – இவர்களது பெயர் 3 முறை சேர்க்கப்படும்.
நிலை 2 (Level II): நடுத்தர ஊதியம் பெறுபவர்கள் – இவர்களது பெயர் 2 முறை சேர்க்கப்படும்.
நிலை 1 (Level I): ஆரம்ப நிலை ஊழியர்கள் – இவர்களது பெயர் 1 முறை மட்டுமே சேர்க்கப்படும்.
இதன் மூலம் அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு விசா கிடைப்பதற்கான வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கிறது.
இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஏற்படும் தாக்கம்
H-1B விசாவைப் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் என்பதால், இந்த மாற்றம் இந்திய ஐடி துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, ஆரம்ப நிலை (Entry-level) ஊழியர்களாக அமெரிக்கா செல்ல நினைப்பவர்களுக்கு இனி விசா கிடைப்பது சவாலாக இருக்கும். அதேசமயம், பல ஆண்டுகள் அனுபவம் மற்றும் அதிக சம்பளம் பெறும் வல்லுநர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கில் புதிய விதி!
அமெரிக்காவின் இந்த புதிய விதியானது “திறமைக்கு முன்னுரிமை” அளிக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளது. இது அமெரிக்கப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று அந்நாட்டு அரசு கருதினாலும், வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு இது ஒரு தடையாக இருக்கக்கூடும். பிப்ரவரி 2026 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்திற்கு ஏற்ப, இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் திட்டங்களை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகிறது.
