சென்னை,மார்ச்.10; தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி கணக்குகளை ஒவ்வொரு கட்சியினரும், அல்லது ஒவ்வொரு கூட்டணியும் வேறு வேறுவிதமாக போட்டு வருகின்றனர்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என அறிவித்து தவெக கூட்டணிக் கதவை திறந்து வைத்திருந்தபோதிலும், ஒருவரும் வந்து தட்டவில்லை. வரும் என மிகவும் நம்பியிருந்த காங்கிரசும் திமுக கூட்டணியிலேயே தங்கிவிட்டது. இதனால் தவெகவின் கூட்டணிக் கணக்கில் மண் விழுந்துவிட்டது.
காங்கிரஸ் ‘கை’ கழுவியதால் ‘கையை’ பிசையும் விஜய்!
என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கும் விஜய்யை, தற்போது தங்கள் வலைக்குள் கொண்டுவர கங்கணம் கட்டி வேலை பார்க்கிறது பாரதிய ஜனதா.
இந்தச் செய்தி காட்டுத்தீயாக பரவியுள்ளதால், தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில், தற்போதைய வெயிலைவிட அனல் தகிக்கின்றது.
கூட்டணியை தொடர்ந்து பலப்படுத்திவரும் ஸ்டாலின்!
ஆளும் கட்சியான திமுக ஆரம்பம் முதலே தனது கூட்டணியைப் பலம் பொருந்திய அணியாக்கிக் கொண்டே வருகிறது. ஆனால், கூட்டணி விஷயத்தில் அதிமுக-பாஜக போட்ட கணக்குகள் எல்லாம் சொதப்பலாகி வருகிறது.
தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுவதால், இனியும் காலந்தாழ்த்தக் கூடாது என்பதை உணர்ந்த அமித் ஷா, நேரடியாக களமிறங்கி விஜய்யை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளை வேகப்படுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற பாஜக மேலிடம் உறுதி!
எப்படியாவது திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதில் பாஜக மேலிடம் உறுதியாக இருப்பதாக அக்கட்சியின் மாநில நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஆனால், இபிஎஸ்-ன் பிடிவாதத்தால் சசிகலா, ஓபிஎஸ், தேமுதிக உள்ளிட்ட சக்திகளை நழுவவிட்டு விட்டோம்; நாங்களே இறங்கிப் பேசவில்லை எனில் தினகரனும் திசை மாறி சென்றிருப்பார் எனக் கூறுகின்றனர்.
கூட்டணி விசயத்தில் கோட்டைவிடுகிறாரா இபிஎஸ்?
பழனிசாமி இப்படி கூட்டணி விசயத்தில் கோட்டைவிட்டுக் கொண்டிருக்கும் அதேவேளையில், வட்டார அளவில் உள்ள சிறிய கட்சிகளைக்கூட தேடிப்பிடித்து அழைத்து வந்து கூட்டணியை மேலும் மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.
இதன் காரணமாக, திமுக அணி தான் வெற்றிபெறுமோ என்ற தோற்றம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்படி நிலைமை கைவிட்டுப் போவதை உணர்ந்து தான் அமித் ஷாவே நேரடியாக களத்தில் இறங்கிவிட்டதாக பேசப்படுகின்றது.
முதற்கட்டமாக சசிகலா மற்றும் ராமதாஸ் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
சசிகலா, ராமதாஸ் வந்தாலும் யாருக்கு எத்தனை தொகுதிகள்?
ஆனால், அவர்கள் இருவரும் கூட்டணிக்கு வந்தாலும், எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதில் தொடங்கி பல்வேறு பிரச்னைகள் தலையெடுக்கும்.
ஒருவேளை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கும் தொகுதிகளில் சிலவற்றை சசிகலாவுக்கும் மருத்துவர் ராமதாஸூக்கும் வழங்கலாம். ஆனால், பிரதான கட்சியான அதிமுக அவர்களுக்கு வேலை செய்யுமா? என்பது சந்தேகம்தான்.
55 தொகுதிகளை கோரும் பாஜக! வாய்ப்பே இல்லை: இபிஎஸ்
இதற்கு நடுவே, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில், ‘பாஜக-வுக்கு 55 தொகுதிகளைக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டுள்ளனர்; கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான இடங்களையும் எங்களிடமே கொடுத்துவிடுங்கள்; நாங்கள் பிரித்துக் கொடுக்கிறோம்’ என பியூஷ் கோயல் கேட்டாராம். ஆனால் இபிஎஸ், ‘பாஜக-வுக்கு 25 தொகுதிகளுக்கு மேல் தரவாய்ப்பில்லை’ என கறாராகச் சொல்லி இருக்கிறார். மக்களவைத் தேர்தல் வாக்கு சதவீதத்தைச் சொல்லி கோயல் விடாப்பிடியாக வாதாட, பேச்சுவார்த்தையை பாதியிலேயே முறித்துக் கொண்டு வெளியேறினாராம் பழனிசாமி.
விஜய்யை குறிவைத்து கோதாவில் இறங்கிய அமித் ஷா!!
இதையெல்லாம் அறிந்த அமித் ஷா உடனே பழனிசாமியை டெல்லிக்கு வரவழைத்துப் பேசினார். அவரிடமும் பழனிசாமி பிடி கொடுக்கவில்லை. எனவே, தற்போது ‘விஜய்யை குறிவைத்து’ கோதாவில் குதித்திருக்கிறார் அமித் ஷா. அதன்படி விஜய்யின் நண்பர் விஷ்ணு ரெட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பியூஷ் கோயல் மூலமாக அமித் ஷா விஜய் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது தான் நம்முடைய இலக்கு.
தவெக தனித்து நின்றால், திமுகவுக்கு தான் வாய்ப்பு: பாஜக!
எனவே, நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வந்து விடுங்கள். உங்களுக்கு 50 சீட், துணை முதலமைச்சர் பதவி தருகிறோம். நீங்கள் தனித்து நின்றால் அது திமுக-வுக்குத்தான் வாய்ப்பாக அமையும் என பாஜக தரப்பில் விஜய்யிடம் பேசப்பட்டிருக்கிறது.
பாஜகவுக்கு 55, தவெகவிற்கு 50 என்றால், அதிமுக என்ன செய்யும்?
இதனைத் தொடர்ந்து நேரடியாகவே விஜய்யிடம் அமித் ஷா தரப்பு பேசியதாகவும் தகவல்கள் வலம் வருகின்றன. திமுக தான் தனது பிரதான குறி என்பதால் விஜய்யும் இந்த விஷயத்தில் ஊசலாட்டத்தில் இருப்பதாகவே தெரிகிறது. இதனிடையே, பாஜக-வின் இந்த நகர்வுகளை எல்லாம் அறிந்த பழனிசாமி, ‘கூட்டணி ஆட்சி எல்லாம் ஒத்துவராது. விஜய்க்கு 50 சீட், பாஜக-வுக்கு 55 சீட் என்றால் நாங்கள் எங்கே போவது?’ என கொந்தளித்ததாகத் தெரிகிறது.
இபிஎஸ்-ஐ சம்மதிக்க வைக்க தீவிர முயற்சி
இருப்பினும் பழனிசாமியை சம்மதிக்க வைக்கும் வேலைகள் நடக்கின்றன. ஒருவேளை பழனிசாமி இறுதிவரை சம்மதிக்க வில்லை என்றால், அதிமுக-வில் அடுத்த பொதுச்செயலாளரை தேர்வு செய்வதற்கும் அமித் ஷா தயங்கமாட்டார் போலிருக்கிறது. ஏனென்றால் கண்ணுக்கு எதிரே தெரியும் வாய்ப்பை அவர் கைநழுவ விட தயாராய் இல்லை” எனப் பேசுகின்றனர்.
இந்த நிலையில், விஜய்க்கு எதிரான கருத்துகளை யாரும் பொதுவெளியில் பேசவேண்டாம் என பாஜக-வினருக்கு டெல்லி தலைமை உத்தரவு பிறப்பித்திருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடுகிறது. இதைவைத்து, “NDA கூட்டணிக்கு விஜய் வந்தால் நல்லது” என தமிழக பாஜக தலைவர்கள் வெளிப்படையாகவே வரவேற்க ஆரம்பித்துவிட்டனர்.
“கொள்கை எதிரி எனக்கூறிவிட்டு, பாஜகவுடன் எப்படி கை கோர்ப்பது?”
பாஜக தரப்பிலிருந்து இப்படியான செய்திகள் வந்தாலும், “கொள்கை எதிரி என்று சொன்ன பிறகு அவர்களோடு நாங்கள் எப்படி கூட்டணி வைக்கமுடியும்? இதெல்லாம் திமுக செய்யும் லாபி” என்கிறது தவெக வட்டாரம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு விஜய்யை கொண்டு வர அமித் ஷா முயற்சிப்பதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
பவன் கல்யாணின் ஆலோசனையை விஜய் ஏற்பாரா?
இப்படியான சூழலில் விஜய்யிடம் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியிருப்பதாக தகவல் பரவி வருகிறது. அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையும்படி பவன் ஆலோசனை வழங்கியதாவும் கூறப்படுகிறு. விஜய்க்கு 17 முதல் 20 சதவீத வாக்குகள் கிடைத்தாலும், கூட்டணி அமைத்தால்தான் வெற்றிபெற முடியும். எனவே இனி முடிவை விஜய்தான் எடுக்க வேண்டும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
