கராகஸ்,ஜன.06; வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இந்தச் சூழலில், மதுரோவிற்காக நீதிமன்றத்தில் வாதாடப் போகும் நபர் யார் என்பது இப்போது பேசுபொருளாகியுள்ளது. அவர் வேறு யாருமல்ல, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவிற்கு விடுதலை பெற்றுத் தந்த புகழ்பெற்ற வழக்கறிஞர் பேரி பொல்லாக் (Barry Pollack) என்ற வழக்கறிஞர் தான் மதுரோவிற்காக ஆஜராக உள்ளார்.
யார் இந்த பேரி பொல்லாக்?
பேரி பொல்லாக் வாஷிங்டனைச் சேர்ந்த ஒரு முன்னணி வழக்கறிஞர் மற்றும் ‘ஹாரிஸ், செயின்ட் லாரன்ட் & வெச்ஸ்லர்’ (Harris St. Laurent & Wechsler) சட்ட நிறுவனத்தின் பங்குதாரர் ஆவார். சிக்கலான கிரிமினல் வழக்குகள் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்டவர். சர்வதேச அளவில் அரசியலால் பாதிக்கப்படும் நபர்களுக்காக வாதிடுவதில் இவர் வல்லவர்.
ஜூலியன் அசாஞ்சே வழக்கில் சாதனை
பேரி பொல்லாக்கின் பெயர் உலகம் முழுவதும் புகழ்பெற்றதற்கு மிக முக்கியக் காரணம் ஜூலியன் அசாஞ்சே. அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு பல ஆண்டுகளாக லண்டன் சிறையில் இருந்த அசாஞ்சேவை, ஒரு நுட்பமான சட்ட ஒப்பந்தத்தின் மூலம் விடுவித்தவர் பொல்லாக். அசாஞ்சே மீதான கடுமையான தண்டனைகளைத் தவிர்த்து, அவரைத் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவிற்குப் பாதுகாப்பாக அனுப்பியது பொல்லாக்கின் மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
மதுரோவிற்காக பொல்லாக் முன்வைக்கும் வாதங்கள்
நியூயார்க் நீதிமன்றத்தில் மதுரோவிற்காக ஆஜரான பொல்லாக், சில அதிரடி வாதங்களை முன்வைத்துள்ளார்:
ராணுவக் கடத்தல்: மதுரோவின் கைது சட்டபூர்வமான கைது அல்ல, அது ஒரு “ராணுவக் கடத்தல்” என்று அவர் வாதாடுகிறார்.
இறையாண்மை பாதுகாப்பு: ஒரு நாட்டின் அதிபராக மதுரோவிற்கு இருக்கும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் சட்ட விதிவிலக்குகளை (Sovereign Immunity) பொல்லாக் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்ட வாய்ப்புள்ளது.
அரசியல் உள்நோக்கம்: இந்த வழக்கு அரசியல் பழிவாங்கலுக்காகப் போடப்பட்டது என்பது அவரது முக்கிய வாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொல்லாக்கின் மற்ற முக்கிய வெற்றிகள்
என்ரான் வழக்கு (Enron Case): அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்பரேட் மோசடியான என்ரான் வழக்கில், ஒரு உயர் அதிகாரிக்கு முழுமையான விடுதலையைப் பெற்றுத் தந்து அனைவரையும் வியக்க வைத்தார்.
மார்ட்டின் டேங்க்லெஃப் (Martin Tankleff): செய்யாத கொலைக்காக 17 ஆண்டுகள் சிறையில் இருந்த ஒருவருக்கு விடுதலையும், சுமார் 13.4 மில்லியன் டாலர் இழப்பீடும் பெற்றுத் தந்தார்.
நிக்கோலஸ் மதுரோவின் விதியை மாற்றுவாரா பொல்லாக்?
அமெரிக்காவின் பிடியில் இருக்கும் நிக்கோலஸ் மதுரோவைச் சட்டரீதியாகக் காப்பாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு, பொல்லாக்கின் கடந்த கால சாதனைகள் ஒரு நம்பிக்கையைத் தருகின்றன. சர்வதேச அரசியல் மற்றும் சிக்கலான சட்டப்பிரிவுகளைக் கையாளுவதில் ‘மாஸ்டர்’ என்று அழைக்கப்படும் பேரி பொல்லாக், மதுரோவின் விதியை மாற்றுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.