Skip to content

U19 ஆசியக் கோப்பை; இலங்கையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா! பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை

துபாயில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான (U19) ஆசியக் கோப்பை ஒருநாள் போட்டி கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், இந்திய அணி இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், இந்திய இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்; இலங்கை தடுமாற்றம்

துபாயில் பெய்த கனமழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் 5 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. இதனால் போட்டி தலா 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சாமிகா ஹேனதிகலா 42 ரன்களும், கேப்டன் விமத் தின்சாரா 32 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் ஹெனில் படேல் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடக்க அதிர்ச்சியிலிருந்து மீண்டு வந்த இந்திய அணி

139 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஆயுஷ் மாத்ரே (7) மற்றும் அதிரடி வீரர் வைபவ் சூர்யவன்ஷி (9) ஆகிய இருவரும் வந்த வேகத்திலேயே வெளியேறினர். இதனால் இந்தியா 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஆனால், அதன் பிறகு இணைந்த விஹான் மல்ஹோத்ரா மற்றும் ஆரோன் ஜார்ஜ் ஜோடி நிதானமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

விஹான் மல்ஹோத்ரா 45 பந்துகளில் 61 குவித்தார்.  ஆரோன் ஜார்ஜ் 49 பந்துகளில் 58 எடுத்தார். 3ஆவது விக்கெட்டுக்கு அவர்கள் இருவரும்  ஆட்டமிழக்காமல் 114 ரன்கள் சேர்த்து, 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி இந்தியாவிற்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.

இந்தியா – பாகிஸ்தான் இறுதிப்போட்டி

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் வரும் நாளை (21.12.2025) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. 11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இவ்விரு அணிகளும் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இறுதிப்போட்டியிலும் வென்று கோப்பையை கைப்பற்றுமா இந்தியா?

இந்திய இளம் வீரர்களின் தன்னம்பிக்கை மற்றும் சிறப்பான பார்ட்னர்ஷிப் ஆட்டம் இந்தியாவை மீண்டும் ஒருமுறை ஆசியக் கோப்பை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளது. குரூப் சுற்றில் ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்தியுள்ள இந்திய அணி, அதே வேகத்துடன் இறுதிப்போட்டியிலும் வென்று கோப்பையைத் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *