துபாயில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கானஆடவர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்திய அணியை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. லீக் சுற்றில் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான், இறுதிப் போட்டியில் மிகச்சிறந்த பதிலடி கொடுத்து தனது இரண்டாவது ஆசியக் கோப்பையை வென்றுள்ளது.
சமீர் மின்ஹாஸின் அதிரடி சதம்: பாகிஸ்தான் இமாலய இலக்கு
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் சமீர் மின்ஹாஸ் (Sameer Minhas) தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களைத் திணறடித்தார். வெறும் 113 பந்துகளில் 172 ரன்கள் குவித்து, U19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி வரலாற்றில் அதிகபட்ச ரன்களைப் பதிவு செய்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
மின்ஹாஸின் இன்னிங்ஸில் 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்குத் துணையாக அகமது ஹுசைன் 56 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சீட்டுக்கட்டாய் சரிந்த இந்திய பேட்டிங்
348 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஆயுஷ் மத்ரே (2) மற்றும் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷி (26) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் அலி ரசா (Ali Raza) இந்திய டாப்-ஆர்டர் வரிசையைச் சிதறடித்தார்.
வெறும் 68 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்த இந்திய அணியால் மீண்டு வர முடியவில்லை. இறுதியில் தீபேஷ் தேவேந்திரன் மட்டும் 36 ரன்கள் எடுத்து போராடினார். இந்திய அணி 26.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 191 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. அவ்வணியின் அலி ரசா சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பாகிஸ்தானின் ஆதிக்கம்; தத்தளித்த இந்திய பேட்ஸ்மேன்கள்
இந்த வெற்றியின் மூலம் 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு (அன்று இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டது) பாகிஸ்தான் தனது முதல் நேரடி ஆசியக் கோப்பை பட்டத்தை வென்றுள்ளது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய சமீர் மின்ஹாஸ் ‘ஆட்டநாயகன்’ மற்றும் ‘தொடர் நாயகன்’ விருதுகளைத் தட்டிச் சென்றார். 9ஆவது முறையாகப் பட்டம் வெல்லும் இந்தியாவின் கனவு தகர்ந்தது.
