Skip to content

U19 உலகக்கோப்பை; ஆப்கானிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த இந்தியா: 10ஆவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

ஹராரே,பிப்.05; 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியுள்ளது. ஜம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நேற்று (04.02.2026) நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், உலகக்கோப்பை வரலாற்றிலேயே மிகப்பெரிய இலக்கை எட்டிப்பிடித்து (Record Chase) இந்திய இளம்படை வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நிர்ணயித்த இமாலய இலக்கு

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, இந்திய பந்துவீச்சாளர்களை திணறடித்து 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பைசல் ஷினோசாடா (110 ரன்கள்) மற்றும் உசைருல்லா நியாசாய் (ஆட்டமிழக்காமல் 101 ரன்கள்) ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர்.

இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி ஒரு வலுவான நிலையில் எட்டியது. இந்திய தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மற்றும் கனிஷ்க் சௌஹான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்தியாவின் அதிரடி தொடக்கம் மற்றும் ஏரோன் ஜார்ஜின் சதம்

311 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி அதிரடியான தொடக்கத்தை அளித்தார். வெறும் 33 பந்துகளில் 68 ரன்கள் விளாசி அவர் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

அதனைத் தொடர்ந்து, தொடக்க வீரர் ஏரோன் ஜார்ஜ் (Aaron George) நங்கூரம் பாய்ச்சி நின்று விளையாடி 104 பந்துகளில் 115 ரன்கள் குவித்தார். இதில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவருக்கு உறுதுணையாக ஆடிய கேப்டன் ஆயுஷ் மத்ரே 62 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 41.1 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 311 ரன்களை எட்டி வெற்றி வாகை சூடியது.

சாதனைகளும் இறுதிப்போட்டியும்

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பல்வேறு மைல்கற்களை எட்டியுள்ளது:

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை வரலாற்றில் 300-க்கும் அதிகமான ரன்களை வெற்றிகரமாக எட்டிப்பிடித்த முதல் அணி என்ற பெருமையை இந்தியா பெற்றது.

இதுவரை 16 முறை நடைபெற்றுள்ள 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில், 10ஆவது முறையாக இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இது இந்திய அணியின் தொடர்ச்சியான 6ஆவது இறுதிப்போட்டி வாய்ப்பாகும்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டம் மற்றும் அசத்தலான பந்துவீச்சு

ஏரோன் ஜார்ஜின் அபார சதம் மற்றும் பந்துவீச்சாளர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் இந்தியா இந்த மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை (06.02.2026) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்ள உள்ளது. சாதனை படைக்கும் வகையில் 6-வது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய இளம்படை உள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *