கடையநல்லூர் தொகுதி (எண் – 221)
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தொகுதி, கடந்த 1967 தொடங்கி இதுவரை 13 தேர்தல்களைச் சந்தித்துள்ளது.
இதில் ஆறு முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி ஒரு முறையும், காங்கிரஸ் ஒரு முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வென்றுள்ளனர்.
வெற்றி, தோல்வியை தீர்மானிப்பது இஸ்லாமியர் வாக்குகள்
இங்கு பெரும்பான்மை மக்களாக இஸ்லாமியர்கள் 45 விழுக்காடு அளவில் உள்ளனர். மறவர் மற்றும் பட்டியலினத்தவர் 30 சதவீதம் இருக்கின்றனர். யாதவர், நாடார், முதலியார் சமூகத்தினரும் கணிசமாக உள்ளார்கள்.
அதிமுகவைப் பொறுத்தவரையில் தற்போதைய எம்எல்ஏவான கிருஷ்ண முரளி மீண்டும் சீட் கேட்கிறார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், சிபிஐ கட்சிகளும் களம் காண விருப்பம்
திமுகவில், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஒன்றியச் செயலாளர் முத்தையா பாண்டியன், நகரச் செயலாளர் வெங்கடேஷ், மாநில விவசாய அணியின் அப்துல் காதர் ஆகியோர் சீட் பெற முயற்சிக்கின்றனர்.
திமுக கூட்டணியில், காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சியினரும் சீட் கேட்கின்றனர்.
கடந்த தேர்தலில் கிருஷ்ணமுரளி 88,000 ஆயிரம் வாக்குகளையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முகமது அபூபக்கர் 64,000 வாக்குகளையும், அமமுகவின் அய்யாதுரை பாண்டியன் 34,000 வாக்குகளையும் பெற்றனர்.
2021-ல் 34,000 வாக்குகள் பெற்ற அமமுக இப்போது அதிமுக கூட்டணியில்…!
வரவிருக்கும் தேர்தலில் தவெக கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில், 2021 தேர்தலில் 34,000 வாக்குகளைப் பெற்ற அமமுக, இம்முறை அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. கடந்த முறை அமமுக அதிக வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். எனவே, இம்முறை கடையநல்லூர் தொகுதியை அமமுக கேட்டுப்பெற வாய்ப்பு இருக்கிறது. ஆகையால், எண் கணிதக் கணக்குகளைப் பார்க்கையில் இத்தொகுதியில் அதிமுக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.
