செய்யூர் (தனி) தொகுதி (எண் – 34)
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் சட்டப்பேரவைத் தொகுதி, கடந்த 2011ல் உருவாக்கப்பட்ட ரிசர்வ் தொகுதியாகும்.
மதுராந்தகம், அச்சிறுபாக்கம், செங்கல்பட்டு ஆகிய தொகுதிகளிலிருந்து நீக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிணைத்து செய்யூர் தொகுதி உருவாக்கப்பட்டது.
கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள பல கிராமங்கள் செய்யூர் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக, திமுக, விசிக தலா ஒரு முறை வென்ற தொகுதி
இதுவரை 3 தேர்தல்களைச் சந்தித்துள்ள இத்தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலா ஒரு முறை வென்றுள்ளன.
இங்கு வன்னியர்கள் 25 சதவீதமும், ஆதி திராவிடர்கள் 30 சதவீதமும், மீனவர் சமூகம் மற்றும் நாயக்கர் உள்ளிட்ட சமூகத்தினர் 30 சதவீதமும், முஸ்லிம்கள் 10 விழுக்காடும், கிறிஸ்தவர்கள் 5 விழுக்காடும் உள்ளனர்.
விசிக-வின் பனையூர் பாபுவுக்கு மீண்டும் சீட் எனப் பேச்சு
திமுக கூட்டணியில் தற்போதைய எம்எல்ஏவான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பனையூர் பாபுவுக்குதான் மீண்டும் சீட் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதிமுகவில் பெரும்பாக்கம் ராஜசேகர் சீட் கேட்கிறார்.
கடந்த தேர்தலில் பனையூர் பாபு 83,000 வாக்குகளையும், அதிமுகவின் கனிதா சம்பத் 79,000 வாக்குகளையும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியின் ராஜேஷ்-க்கு சுமார் 10,000 வாக்குகள் கிடைத்தன.
என்ன செய்யப்போகிறது தவெக?
வரும் தேர்தலில் முதல் முறையாக களமிறங்கும் தவெகவுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றாலும், அக்கட்சி பிற கட்சிகளின் வாக்குகளை சிதறடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
தொகுதியில், பனையூர் பாபுவின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக பேசிக் கொள்கின்றனர். இதனால் அவருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் எனத் தெரிகிறது.