சிவகாசி,ஏப்.16; தமிழ்நாடு அரசியல் களம் சட்டப்பேரவைத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் சூழலில், கூட்டணி விவகாரங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வார்த்தைப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில பாஜக முன்ளாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை விமர்சித்து தெரிவித்த கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன.
அண்ணாமலையின் பேச்சும் மக்களின் நம்பிக்கையும்
சிவகாசியில் நேற்று (ஏப்ரல் 15, புதன்) செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக முள்ளாள் தலைவர் அண்ணாமலையின் கருத்துகளை மக்கள் ஒருபோதும் ஏற்கப்போவதில்லை என்று தெரிவித்தார். குறிப்பாக தொகுதி மறுவரையறை (Delimitation) குறித்து அண்ணாமலை தெரிவித்து வரும் கருத்துகளைச் சுட்டிக்காட்டிய அவர், “அண்ணாமலை என்ன சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் அவரை நம்ப மாட்டார்கள்; தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அவர் கூறுவதை மக்கள் ஏற்கனவே நிராகரித்துவிட்டனர்” என்று கூறினார்.
சீமானுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து வருவதற்கும் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்தார். “சீமான் சொல்வது போல் நாங்கள் யாரையும் மிரட்டி தொகுதிகளை வாங்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்த காரணத்தால், கூட்டணி அறத்தின் அடிப்படையில் நாங்கள் கேட்ட 41 தொகுதிகளைக் குறைத்துக் கொண்டோம்” என்று விளக்கமளித்தார்.
மேலும், காரைக்குடியில் சீமான் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்றும், அங்கு காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி தான் வெற்றி பெறுவார் என்றும் செல்வப்பெருந்தகை உறுதிபடத் தெரிவித்தார். சீமான் தனது விமர்சனங்களை நிறுத்திக்கொள்ளாவிட்டால் அவருக்கு ‘சங்கடம்’ ஏற்படும் நிலை உருவாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
கூட்டணி அரசியலும் தொகுதிப் பங்கீடும்
திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி விட்டுக்கொடுக்கும் தன்மையுடன் செயல்படுவதாகக் குறிப்பிட்ட செல்வப்பெருந்தகை, சீமானின் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்றும் கணித்துள்ளார். 2026 தேர்தல் களம் அனல் பறக்கும் நிலையில், காங்கிரஸின் இந்த ஆக்ரோஷமான நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் கவனிக்கத்தக்க ஒன்றாக உள்ளது.
மக்கள் யாரை நம்புகிறார்கள்-பொறுத்திருந்து பார்ப்போம்!
தமிழ்நாடு அரசியலில் அண்ணாமலையின் அதிரடி பேச்சுகளும், சீமானின் தனித்துவமான விமர்சனங்களும் தொடர்ந்து விவாதங்களை உருவாக்கி வருகின்றன. இந்நிலையில், செல்வப்பெருந்தகையின் இந்த நேரடித் தாக்குதல், வரும் தேர்தலில் காங்கிரஸ் தனது பலத்தை நிரூபிக்க எவ்வளவு உறுதியாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. மக்கள் யாரை நம்பப்போகிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளிலேயே தெரியவரும்.
