Skip to content

அண்ணாமலை டெல்லி பயணம்; பாஜகவில் இருந்து விலகப் போவதாக தகவல்! அடுத்தது என்ன?

சென்னை,ஜூன்.02; தமிழ்நாடு அரசியலில் தற்போதைய ஹாட் டாபிக் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், மாநில பாஜக முன்னாள் தலைவருமான கே. அண்ணாமலையின் டெல்லி பயணம் தான். அவர் பாஜகவில் இருந்து விலகி, தனியாக புதிய அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிருப்தியில் அண்ணாமலை: பின்னணி என்ன?

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு தனது ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்த அண்ணாமலை, பின்னர் பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து 2021 முதல் 2025 வரை தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.

இருப்பினும், சிறிது காலத்திற்கு முன்னர் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டார். அதன் பிறகு கட்சித் தலைமை அவருக்கு வேறு எந்த முக்கியப் பொறுப்புகளையும் வழங்கவில்லை. இதனால் கடந்த சில மாதங்களாகவே அண்ணாமலை கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி பயணம் மற்றும் ராஜினாமா கடிதம்

இந்நிலையில், அண்ணாமலை திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை அவர் சமர்ப்பிக்க வாய்ப்புள்ளதாக டெல்லியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலையை சமாதானப்படுத்த பாரதிய ஜனதா தலைமை அவருக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்க முன்வந்ததாகவும், ஆனால் அந்த வாய்ப்பை அண்ணாமலை திட்டவட்டமாக நிராகரித்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

புதிய இயக்கம்… அடுத்து சொந்தக் கட்சி?

பாஜகவில் இருந்து வெளியேறிய பின் அண்ணாமலையின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முதற்கட்டமாக அவர் ஒரு சமூக நல இயக்கத்தை (Movement) தொடங்க திட்டமிட்டுள்ளாராம். அந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைத் திரட்டி, அதன் தொடர்ச்சியாக விரைவில் ஒரு புதிய அரசியல் கட்சியை அண்ணாமலை பிரகடனம் செய்ய உள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அண்ணாமலையின் தற்போதைய விளக்கம்

இந்த அதிரடி அரசியல் திருப்பங்கள் குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “இன்னும் இரண்டு நாட்களில் செய்தியாளர்களைச் சந்தித்து அனைத்துக் கேள்விகளுக்கும் விரிவான பதில் அளிக்கிறேன்” என்று சுருக்கமாகக் கூறிவிட்டு டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாடு அரசியலில் ஒரு பெரிய மாற்றம் நிகழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கினால் பாஜகவுக்கு பின்னடைவா?

தமிழ்நாடு பாஜகவை ஆக்ரோஷமான பாதையில் கொண்டு சென்ற அண்ணாமலையின் இந்த திடீர் முடிவு, அக்கட்சிக்கு தமிழ்நாட்டில் பின்னடைவை ஏற்படுத்தும் எனப் பேசப்படுகிறது. அதேவேளையில், அவரது புதிய அரசியல் பயணம் அவருக்கு கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இன்னும் இரு தினங்களில் அண்ணாமலை வெளியிடப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ்நாடு அரசியல் களத்தின் அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *