பல்லடம் தொகுதி (எண் – 115)
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் தொகுதி, 1957 தொடங்கி இதுவரை 15 முறை தேர்தலைச் சந்தித்துள்ளது.
அதில், அதிமுக 9 முறையும், பிரஜா சோசலிச கட்சி 3 முறையும், திமுக 2 முறையும், காங்கிரஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
திமுக முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன் வென்ற தொகுதி
மத்திய அமைச்சராகவும், மாநில அமைச்சராகவும் பதவி வகித்துள்ள மு.கண்ணப்பன், இத்தொகுதியிலிருந்து ஒருமுறை சட்டப்பேரவைக்கு தேர்வானார்.
இத்தொகுதியில் பெருமளவில் உள்ள கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தான் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கின்றனர். இவர்களுக்கு அடுத்தபடியாக பட்டியலினத்தவர், கம்மவார் நாயுடு, செட்டியார், முதலியார் சமூகத்தினரும் பரவலாக உள்ளனர்.
எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆர்வம் காட்டவில்லை எனப் பேச்சு!
அதிமுகவில், முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் பல்லடம் தொகுதியில் மீண்டும் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.
எனவே, முன்னாள் எம்எல்ஏ கரைப்புதூர் நடராஜன், நகரச் செயலாளர் ராமமூர்த்தி, முன்னாள் எம்எல்ஏ பரமசிவம், பொங்கலூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் யு.எஸ். பழனிசாமி ஆகியோர் சீட் பெற காய் நகர்த்துகின்றனர்.
திமுகவில் பல்லடம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் சோமசுந்தரம், பொங்கலூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பாலுசாமி, பொங்கலூர் ஒன்றியக்குழு முன்னாள் தலைவரும் வழக்கறிஞருமான குமார் உள்ளிட்டோர் சீட் பெற முயல்கின்றனர்.
வாக்குகள் பிரிய வாய்ப்பு! ஆனாலும் அதிமுக வெற்றி முகம்
2021 தேர்தலில் எம்.எஸ்.எம். ஆனந்தன் 1,27,000 வாக்குகளும், மதிமுக வேட்பாளர் முத்துரத்தினம் 94,000 வாக்குகளும் பெற்றனர். நாம் தமிழர் கட்சியின் சுப்பிரமணியனுக்கு 20,000 வாக்குகள் கிடைத்தன.
வரும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான வாக்குகளைப் பிரிக்கும் எனக் கணிக்கப்படுகிறது. ஆனாலும், அதிமுகவின் கோட்டையான பல்லடம் தொகுதியில் அக்கட்சியே முந்துகிறது.
