Skip to content

அதிமுக பொதுக்குழு கூடியது; கரூரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவிருக்கின்றது. இதில் களமாட அதிமுக தீவிரமாக தயாராகி வருகிறது. இதையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலம் முழுவதும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகின்றார். இந்தநிலையில், அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் இன்று (10.12.2025) காலை 10 மணியளவில் கூடியது.

இடைக்கால அவைத்தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு

இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். செயற்குழு கூட்டம் தொடங்கியதும் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர், கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால், கட்சியின் சட்டதிட்ட விதிகளின்படி, தற்காலிக அவைத் தலைவராக கே.பி.முனுசாமி தேர்வு செய்யப்படுகிறார். அவர் இந்த கூட்டத்தை நடத்தித் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார். எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்த இந்த தீர்மானத்தை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வழிமொழிந்தார். அதனைத் தொடர்ந்து மேடையில் இருந்த கே.பி.முனுசாமி, எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார்.

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

அதனைத் தொடர்ந்து கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் மறைந்த தலைவர்களுக்கும், கட்சி நிர்வாகிகள் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்னாள் அமைச்சர் செம்மலை வாசித்தார். மறைந்த முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதேபோல், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கும், மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆரின் வாழ்நாள் உதவியாளர் மகாலிங்கம், பழம்பெரும் நடிகை சரோஜாதேவி, நாகாலாந்து ஆளுநராக இருந்த இல.கணேசன் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *