Skip to content

அதிமுக பொதுக்குழு நாளை (டிச.10) கூடுகிறது; ஓபிஎஸ் குறித்து முடிவு?

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு நாளை கூடவிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு நாளை (10.12.2025) காலை 10 மணிக்கு கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெறவிருக்கும் கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்ற உள்ளார். கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 3,000 பேர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 5,000 பேர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது. மேலும், நடிகர் விஜய்யின் தவெகவையும் கூட்டணிக்குள் கொண்டுவர அதிமுக ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், தமிழக வெற்றிக்கழகம் கொள்கை எதிரியாக கருதும் பாஜக., அதிமுக கூட்டணியில் இருப்பதால், அதற்கு வாய்ப்பு இல்லை என்றே பேசப்படுகிறது. அதேவேளையில், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என பாஜக நீண்டநாளாக கூறி வருவது பற்றி பொதுக்குழுவில் பேசப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது. ஏற்கனவே, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஓ.பன்னீா்செல்வம், வி.கே. சசிகலா, டிடிவி தினகரனை ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்த செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவர் தவெகவில் இணைந்து பணியாற்றிவரும் சூழலில், ஓ.பன்னீர்செல்வம் மட்டுமாவது அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. முன்னதாக, ஒ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசிவிட்டு திரும்பினார். ஏற்கனவே அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து வரும் 18ஆம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கெடு விதித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *